ராம நாம ஜபம் செய்வதற்கென்று ஒரு ஆசிரமம் எங்குள்ளது தெரியுமா?
ஸ்ரீராம நாமத்தை ஜபிக்க வரும் பக்தர்களுக்காக ஆசிரமம் ஒன்று இந்தியாவில் இருக்கிறது. இங்கே மூன்று நாட்கள் தங்கி இருந்து ராம நாம கீர்த்தனைகள் செய்யலாம்.
இந்த ஆசிரமத்தை ஆரம்பித்தவர் ராமதாசரின் (சமர்த்த ராமதாசர் மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசபக்தியை தூண்டிய வீர சிவாஜியின் குரு ஆவார்) வம்சாவழியைச் சேர்ந்தவர்.
1931ம் ஆண்டு முதல் இன்று வரையிலும் இங்கே தினமும் 12 மணி நேரம் விடாமல் ராம நாம கீர்த்தனை நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. இந்த ராம நாம ஜபம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். முதல் 30 நிமிடங்கள் பெண்கள் மட்டும் கீர்த்தனை செய்வார்கள். அடுத்த 30 நிமிடங்கள் ஆண்கள் மட்டும் கீர்த்தனை செய்வார்கள்.
இந்த ராம நாம கீர்த்தனையில் நாமும் பங்கு பெறலாம் . அதற்கு முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம். அப்படி முன்பதிவு செய்தால் இந்த ஆசிரமத்தில் தங்கிட அறை, உணவு எல்லாம் இலவசமாகக் கிடைக்கும். ராம நாமத்தை ஜபிக்க வரும் பக்தர்களுக்காக ஆசிரமமே இந்த ஏற்பாட்டை செய்துள்ளது.
இந்த ஆசிரமத்தில் அதிகபட்சம் மூன்று நாட்கள் தங்கலாம். 1931 முதல் தொடர்ந்து ராம நாம ஜபம் நடைபெற்று வருவதால் இங்கு கோடிக்கணக்கான எண்ணிக்கையில் லட்சக்கணக்கான பக்தர்களின் ஜப எண்ணிக்கை காற்றில் பரவி இருப்பதை நன்கு உணர முடிகிறது.
மன அமைதியை தரக்கூடிய இந்த ராம நாம ஜபத்தை தொடங்கியதுடன், ஆசிரமத்தையும் நிறுவியவர் ரமண மகரிஷியிடம் நயன தீட்சை பெற்றவர். இவருடைய சீடர்தான் விசிறி சாமியார் என்று அழைக்கப்படும் யோகி ராம்சுரத்குமார் ஆவார். அந்த ராம நாம கீர்த்தனை, ‘ஓம் ஸ்ரீராம ஜய ராம ஜய ஜய ராமா’ என்பதாகும்.
இந்த ஆசிரமம் தமிழ்நாடு – கேரளா – கர்நாடகா மாநிலங்களின் எல்லைப் பகுதியில் ஆனந்த ஆசிரமம், காஞ்சன்கோடு, வடக்கு கேரளா என்ற இடத்தில் அமைந்துள்ளது. முடிந்தால் நாமும் சென்று இந்த ராம நாம ஜப வேள்வியில் கலந்து கொள்ளலாம்.