ஒரே கருவறையில் மூன்று நரசிம்மர்கள் அருளும் திருத்தலம் தெரியுமா?

டலூர் மாவட்டம், அபிஷேகப்பாக்கத்தில் உள்ளது சிங்கிரிக்குடி லட்சுமி நரசிம்மர் திருக்கோயில். அஷ்ட நரசிம்ம தலங்களில் இதுவும் ஒன்றாகும்.

பதினாறு திருக்கரங்களுடன் காட்சி தருகிறார் சிங்கிரிக்குடி லட்சுமி நரசிம்மர். தாயார் கனகவல்லித்தாயார். அஷ்ட நரசிம்ம தலங்களில், சிங்கிரிக்குடி, பூவரசன்குப்பம், பரிக்கல் ஆகிய மூன்று நரசிம்மர் கோயில்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளது சிறப்பு.

சிங்கிரிக்குடி லட்சுமி நரசிம்மர் கோயில் கருவறையில் மூன்று நரசிம்மர்கள் உள்ளனர். பதினாறு கரங்களுடன் இரண்யனை வதம் செய்த கோலத்தில் உக்கிர நரசிம்மர், யோக நரசிம்மர், மற்றொருவர் சிறிய வடிவிலான பால நரசிம்மர். உத்ஸவ மூர்த்தியின் பெயர் பிரகலாதவரதன். ஆலமரத்தை தல விருட்சமாகக் கொண்ட இக்கோயில் மிகவும் பழைமையானது.

மேற்கு நோக்கி நின்று இரணியனை வதம் செய்த கோலத்தில் கையில் ஆயுதங்கள் தாங்கி காணப்படும் இந்த நரசிம்மரின் இடதுபுறம் வதம் செய்யப்பட்ட இரணியனின் மனைவி நீலாவதியும், வலதுபுறம் பிரகலாதன், வசிஷ்டர், சுக்கிரன் மற்றும் மூன்று அசுரர்களும் காட்சி தருகின்றனர். மற்ற இரண்டு மூலவர்களான யோக நரசிம்மர் மற்றும் பால நரசிம்மர் சிறிய மூர்த்தங்களாக வடக்கு நோக்கி காட்சி தருகின்றனர்.

இக்கோயில் கனகவல்லித் தாயாரை வழிபட, திருமணத் தடை, குழந்தை பாக்கியமின்மை, எதிரிகளால் ஏற்படும் தொந்தரவுகள், கிரக தோஷம் போன்றவை நீங்கும் என்பது நம்பிக்கை. இத்தலம் ஒரு நவகிரக தோஷ நிவர்த்தி தலமாகவும், பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. சுவாதி நட்சத்திரத்தன்றும், பிரதோஷ நாளன்றும் இந்த நரசிம்மரை தரிசித்து நெய் தீபம் ஏற்ற, குறைகள் யாவும் தீர்ந்து வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும். இவரை வணங்கிட சகல துன்பங்களும் போய், வாழ்வில் வளம் பெருகும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *