பக்தரின் ஐபோனை பிடுங்கிச் சென்று ‘டீல்’ பேசிய குரங்கு! வைரலாகும் தரமான சம்பவம்!
மதுரா மற்றும் பிருந்தாவனம் போன்ற இந்திய நகரங்களில் குரங்குகளின் அட்டகாசம் மிகவும் சகஜம். குறும்புத்தனமான நடத்தைக்கு பெயர் பெற்ற குரங்குகள், மக்களின் உடைமைகளை அபகரித்துச் சென்று, அவற்றைத் திரும்ப் பெறுவதற்குள் படாதபாடு படுத்திவிடும்.
அப்படிப்பட ஒரு சம்பவம் அண்மையில் நடந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் உள்ள ரங்கநாதர் கோயிலில் பக்தர் ஒருவரின் ஐபோனை ஒரு குரங்கு அபேஸ் செய்துவிட்டது. அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் மிகவும் வேடிக்கையானது.
சென்ற ஜனவரி 6ஆம் தேதி நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தின் வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டு வைரலாகியுள்ளது. வீடியோவில் இரண்டு குரங்குகள் ஒரு கட்டடத்தின் மேல் அமர்ந்திருப்பதைக் காணமுடிகிறது. அவற்றில் ஒன்று கோயிலுக்கு வந்தவரிடம் இருந்து பிடுங்கிச் சென்ற விலை உயர்ந்த ஐபோனை வைத்திருக்கிறது.
கீழே ஒரு கூட்டம் கூடி நின்று, குரங்கிடம் இருந்து மொபைலை மீட்க முயற்சி செய்கிறார்கள். அவர்கள் குரங்கை நோக்கி ஃப்ரூட்டி பாட்டிலை வீசி, மொபைலை திரும்பப் பெற முயற்சி செய்தனர். இந்த டீலுக்கு ஒத்துக்கொண்ட அந்தக் குரங்கு ஃப்ரூட்டி பாட்டிலை கேட்ச் பிடித்தவுடன், மொபைலை சட்டென்று கீழே போட்டுவிட்டு ஓடுகிறது. கீழே தயாராக இருந்த நபர் ஒருவர் கீழே விழுந்த மொபைல் போனை லாகவமாகப் பிடித்துவிட்டார்.
https://www.instagram.com/reel/C1w_JhTvOaU/?utm_source=ig_web_copy_link
இந்த சம்பவத்தின் வீடியோவை விகாஸ் என்பவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். வீடியோவைப் பார்த்த பயனர்கள் பலவிதமாக தங்கள் கருத்துகளைக் கூறிவருகின்றனர். ”பிருந்தாவனத்தின் குரங்குகள் ஒரு ஃப்ரூட்டிக்கு ஐபோன் விற்பனை செய்துள்ளன” என்று தெரிவித்திருக்கிறார்.
குரங்குகள் மிகவும் புத்திசாலித்தனமாக மாறிவிட்டன என்றும் உணவுக்காக போன்கள் மற்றும் மூக்குக் கண்ணாடிகளைத் திருடி, பேரம் பேச கற்றுக்கொண்டுவிட்டன என்றும் பல பயனர்கள் கூறியுள்ளனர்.