செங்கடலில் 25 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்: கடற்படை தகவல்
மத்திய ஆப்ரிக்காவில் உள்ள கபோன் நாட்டின் தேசியக்கொடியுடன் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு இந்தியா நோக்கி வந்த எம்வி சாய்பாபா என்ற கப்பல் மீது செங்கடலில் ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று இந்திய கடற்படை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
தாக்குதலுக்குள்ளான கப்பலில் 25 இந்திய பணியாளர்கள் இருந்தனர் என்றும், அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, ஏமனின் ஹுதி பயங்கரவாதிகள் நடத்திய ஆளில்லா விமானத்தாக்குதலுக்கு உள்ளன இரண்டு கப்பல்களில் இந்திய கொடியுடன் பயணித்த கச்சா எண்ணெய் கப்பலும் ஒன்று என்று அமெரிக்க சென்ட்ரல் கமாண்ட் தெரிவித்திருந்தது. அமெரிக்காவின் சென்ட்ரல் கமாண்ட் தனது அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: “டிச.23 (சனிக்கிழமை) அன்று ஹுதிக்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமன் பகுதியில் இருந்து, தெற்கு செங்கடலில் சர்வதேச கடல் பாதையை நோக்கி இரண்டு கப்பல் எதிர்ப்பு ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் எந்த கப்பலும் பாதிக்கப்படவில்லை.
ஆப்பரேஷன் ப்ராஸ்பெரிடி கார்டியனின் ஒரு பகுதியாக யுஎஸ்எஸ் லாபூன் (டிடிஜி 58) கப்பல் தெற்கு செங்கடலில் மாலை 3 மணி முதல் இரவு 8 க்குள் (சனா நேரம்) ரோந்து சென்று கொண்டிருந்தது. அப்போது ஏமனில் ஹுதிக்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் இருந்து யுஎஸ்எஸ் லாபூன் நோக்கி வந்த 4 ஆளில்லா விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டன. இந்தத் தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சுமார் 8 மணிக்கு (சனா நேரம்) தெற்கு செங்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த இரண்டு கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.
நார்வே நாட்டுக் கொடியுடன். அந்த நாட்டுக்குச் சொந்தமான ரசாயனம் மற்றும் கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் டேங்கர் கப்பல், ஹுதிக்களின் ஒருவழி ஆளில்லா விமானத்தாக்குதலுக்குள்ளானது. இந்தத் தாக்குதலில் காயமோ சேதங்களோ இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இரண்டாவது, கபோன் நாட்டுக்குச் சொந்தமான இந்திய கொடியுடன் பறந்த எம்வி சாய்பாபா கச்சா எண்ணெய் டாங்கர் கப்பல் ஆளில்லா விமானத்ததாக்குதலுக்கு உள்ளானதாக தகவல் வந்தது. இந்த தாக்குதலிலும் யாருக்கும் காயமில்லை. நாங்கள் அவர்களின் அழைப்புக்கு பதிலளித்தோம்.
கடந்த அக்.17-க்கு பின்னர் செங்கடலில் செல்லும் வணிகக்கப்பல்களின் மீது ஹுதிக்கள் நடத்தும் 14 மற்றும் 15 வது தாக்குதல் இது.” இவ்வாறு கூறப்பட்டுள்ளது. மேலும், இஸ்ரேல் – ஹமாஸ் மோதல்களுக்கு பின்னர் ஹுதிக்கள் தங்களின் தாக்குதல்களை அதிகப்படுத்தியுள்ளனர் என்று யுஎஸ்எஸ் லாபூன் குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.