சமைத்த உணவை ஃபிரிட்ஜில் பாதுகாப்பாக எப்படி சேமிப்பது?
நம் பிஸியான வாழ்க்கையின் காரணமாக, தினசரி கிச்சனுக்கு சென்று சமைப்பதற்கு பலருக்கு நேரமில்லை. இதனால் பல நேரங்களில் உணவு டெலிவரி செய்யும் ஆப்ஸ், ஹோட்டல், இன்ஸ்டெண்ட் உணவுகளை நம்பி இருக்கிறோம். மணிக்கணக்கில் வேலை பார்த்து சம்பாதித்து, இறுதியில் நம் உடலை கவனிக்க மறந்து விடுகிறோம். அதனால் பல சிக்கல்களுக்கும் ஆளோகிறோம்.
இன்னும் சிலர் உணவை மொத்தமாகத் தயாரித்து, பின்னர் பயன்படுத்துவதற்காக ஃபிரிட்ஜில் சேமித்து வைக்கின்றனர். ஆனால் பல சுகாதார நிபுணர்கள் சமைத்த உணவை அதிக காலம் ஃபிரிட்ஜில் சேமித்து வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்கள். அப்படியானால் எவ்வளவு காலம் சேமிப்பது நல்லது?
ஊட்டச்சத்து நிபுணர் ரோகினி பாட்டீலின் கூற்றுப்படி, கெட்டு போகக்கூடிய உணவுகளான இறைச்சி, கோழி, மீன், பால் பொருட்கள் மற்றும் முட்டை போன்றவற்றை ஃபிரிட்ஜில் சேமித்த சில நாட்கள் முதல் ஒரு வாரத்திற்குள் பயன்படுத்த வேண்டும். அதே நேரத்தில் ரொட்டி, பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற அழுகாத பொருட்களை நீண்ட காலத்திற்கு சேமிக்கலாம்.
ஃபிரிட்ஜில் வைத்த உணவுகளில், 3 முதல் 4 நாட்களுக்குப் பிறகு பாக்டீரியா வளர ஆரம்பிக்கலாம். இது உணவு நச்சுத்தன்மையின் அபாயத்தை அதிகரிக்கிறது, இது உணவு மூலம் பரவும் நோய் என்றும் அழைக்கப்படுகிறது. பாக்டீரியா பொதுவாக உணவின் சுவை, வாசனை அல்லது தோற்றத்தை மாற்றாது. இதன் விளைவாக, ஒரு உணவு உண்பதற்கு பாதுகாப்பானதா என்பதை உங்களால் சொல்ல முடியாது என்று நிபுணர் கூறினார்.