நடுவானில் விமானப் பணிப்பெண்ணை மதுபோதையில் கடித்த பயணி: விமானி எடுத்த அதிரடி முடிவு
மது போதையில் பயணி ஒருவர் விமான குழுவை சேர்ந்த பெண் ஒருவரை கடித்ததை தொடர்ந்து விமானம் ஜப்பானுக்கு மீண்டும் திரும்பியது.
மதுபோதையில் பயணி
ஜப்பானில் இருந்து அமெரிக்கா செல்லும் ANA விமானத்தில் பயணி ஒருவர் உச்சக்கட்ட மது போதையில் விமான குழுவை சேர்ந்த பணிப்பெண் ஒருவரை கடித்த சம்பவம் விமானத்திற்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமானம் பசிபிக் பெருங்கடலுக்கு மேலே பறந்து கொண்டு இருந்த போது மது போதையில் இருந்த 55 வயது அமெரிக்க பயணி ஒருவர், விமானப் பணிப்பெண் ஒருவரின் கையை கடித்தார், அதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது என ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் AFPயிடம் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தின் போது விமானத்தில் 159 பயணிகள் இருந்ததாகவும் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜப்பானுக்கு திரும்பிய விமானம்
இந்த அசம்பாவித சம்பவத்தை தொடர்ந்து விமானத்தை மீண்டும் ஜப்பான், டோக்கியோவில் Haneda விமான நிலையத்திற்கு விமானி திருப்பி தரையிறக்கினார்.
பொலிஸார் உடனடியாக அவரை கைது செய்து விசாரணையை தொடங்கினர், இந்த விசாரணையின் போது தான் தூக்க மாத்திரை போட்டு இருந்ததாகவும், என்ன நடந்தது என்று தெரியவில்லை என்றும் அந்த நபர் பொலிஸாரிடம் தெரிவித்து இருப்பதாக ஜப்பானிய ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது.