பயிற்சி மையங்கள்.. இனி 16 வயதுக்குட்பட்ட மாணவர்களை சேர்க்க முடியாது.. இன்னும் பல புதிய விதிகள் – அரசு அதிரடி!
புதிய வழிகாட்டுதல்கள், தவறான வாக்குறுதிகளை அளிப்பது மற்றும் தரவரிசை அல்லது நல்ல மதிப்பெண்களுக்கு உத்தரவாதம் அளிப்பது போன்றவற்றுக்கு எதிராக பயிற்சி நிறுவனங்களுக்கு அறிவுறுத்துகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது தனியார் பயிற்சி மையங்களின் தன்னிச்சையான போக்கை கட்டுப்படுத்த மத்திய அரசு சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த புதிய வழிகாட்டுதல்களின்படி, இனி யாரும், எங்கும், எந்த நேரத்திலும் ஒரு தனியார் பயிற்சி மையத்தைத் துவங்கிவிட முடியாது. அதற்கு இதற்கு, முதலில் அவர் பதிவு செய்ய வேண்டும். அது மட்டுமின்றி, இப்போது 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயிற்சி மையத்தில் படிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். பயிற்சி மையங்கள் எந்த மாணவரிடமும் தன்னிச்சையாக கட்டணம் வசூலிக்க முடியாது.
நாடு முழுவதும் NEET அல்லது JEEக்கு தயாராகும் மாணவர்களிடையே ஏற்படும் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதையும், நாட்டில் கட்டுப்பாடற்ற பயிற்சி மையங்கள் தன்னிச்சையாக செயல்படுவதையும் கருத்தில் கொண்டு மத்திய அரசு இந்த வழிகாட்டுதலை வழங்கியுள்ளது. மேலும் அந்த வழிகாட்டுதல்களின்படி, IIT, JEE, MBBS மற்றும் நீட் போன்ற தொழில்முறை படிப்புகளுக்கான பயிற்சி மையங்களில் தீ மற்றும் கட்டிட பாதுகாப்பு தொடர்பான NOC இருக்க வேண்டும்.
பரீட்சை மற்றும் வெற்றியின் மீதான அழுத்தம் தொடர்பான பிரச்சினைகளை சமாளிக்க மாணவர்களுக்கு உளவியல் மற்றும் மனநலம் தொடர்பான ஆதரவும் வழங்கப்பட வேண்டும். பயிற்சி மையங்கள் வழிகாட்டுதல்களின்படி பதிவு செய்யாததற்கும், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மீறுவதற்கும் கடுமையான அபராதம் செலுத்த நேரிடும்.
இதன்படி மத்திய அரசின் விதிகளை முதல் முறை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.25,000 அபராதமும், இரண்டாவது முறைக்கு அதே தவறை செய்பவர்களுக்கு ரூ.1 லட்சமும், மூன்றாவது முறை மீறினால் பதிவு ரத்து செய்யப்படுவதை எதிர்கொள்ளவும் பயிற்சி மையம் தயாராக வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. மேலும் அந்த வழிகாட்டுதல்களின்படி, பயிற்சி துவங்கிய பிறகு அதற்கான கட்டணத்தை அதிகரிக்க முடியாது.
ஒரு மாணவர் முழுப் பணத்தையும் செலுத்திய போதிலும், படிப்பை பாதியிலேயே விட்டுச் செல்ல விண்ணப்பித்தால், பாடத்தின் மீதமுள்ள காலத்திற்கான பணத்தைத் திருப்பித் தர வேண்டும். தங்கும் விடுதி மற்றும் மெஸ் கட்டணங்களும் ரீஃபண்டில் சேர்க்கப்படும்.