மல்யுத்த கூட்டமைப்பு சஸ்பெண்ட்; போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியா? – என்ன நடந்தது?
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவராக சஞ்சய் சிங் தேர்வானதற்கு எதிராக மல்யுத்த வீரர் வீராங்கனைகள் போராட்டத்தில் இறங்கியிருந்தனர். இதனைத் தொடர்ந்து இப்போது மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் மல்யுத்த கூட்டமைப்பை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருக்கிறது.
மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்த பா.ஜ.க எம்.பி பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் மீது வீராங்கனைகள் பாலியல் புகார்களைத் தெரிவித்து வந்தனர். வீராங்கனைகளின் தொடர் போராட்டத்தால் மல்யுத்த கூட்டமைப்பிற்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்தத் தேர்தலிலும் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக பிரிஜ் பூஷணின் கூட்டாளியான சஞ்சய் சிங்கே வெற்றி பெற்றார். இதனால் மல்யுத்த வீரர் வீராங்கனைகள் கடும் அதிருப்தி அடைந்தனர். ரியோ ஒலிம்பிக்ஸில் வெண்கலம் வென்ற சாக்ஷி மாலிக் தான் மல்யுத்தத்திலிருந்தே ஓய்வு பெறுவதாக அறிவித்து கண்ணீர் மல்க பத்திரிகையாளர் சந்திப்பிலிருந்து வெளியேறினார்.
பஜ்ரங் புனியா மத்திய அரசு வழங்கிய விருதுகளை அப்படியே திருப்பி அளித்தார். நாடு முழுவதும் மல்யுத்த வீரர் வீராங்கனைகளுக்கு ஆதரவாக குரல் எழவே மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் இப்போது மல்யுத்த கூட்டமைப்பை சஸ்பெண்ட் செய்துள்ளது.
ஆனால், வீரர் வீராங்கனைகளின் போராட்டத்தினால் இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை என விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவிக்கவில்லை. மாறாக, விதிகளை மீறி 15 மற்றும் 20 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய அளவிலான போட்டிகளை நடத்தும் அறிவிப்பை வெளியிட்டதாலயே கூட்டமைப்பு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
21-ம் தேதி சஞ்சய் சிங் வெற்றி பெற்ற உடனேயே டிசம்பர் 28 முதல் 31-ம் தேதிக்குள் தேசிய அளவிலான போட்டிகள் உத்தரப் பிரதேசத்தின் நந்தினி நகரில் நடக்கும் என அறிவித்தார். ஓய்வை அறிவித்த சாக்ஷி மாலிக் இதற்கு எதிராகவும் ட்வீட் செய்திருந்தார். “பல இளம் வீராங்கனைகள் எனக்கு போன் செய்து டிசம்பர் 28-ம் தேதி நடக்கவிருக்கும் தொடர் பற்றிப் பேசுகின்றனர். போட்டி நடைபெற இருக்கும் கோண்டாவின் நந்தினி நகர் பிரிஜ் பூஷண் செல்வாக்காக இருக்கும் பகுதி.
இப்படியிருக்க வீராங்கனைகள் எப்படி அங்கே சென்று ஆட முடியும். நந்தினி நகரைத் தவிர போட்டிகளை நடத்த வேறு இடமே இந்தியாவில் இல்லையா?” எனக் காட்டமாக சாக்ஷி மாலிக் தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தார். இந்நிலையில் மல்யுத்த கூட்டமைப்பும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறது.