ஊழியர்களுக்கு பைக் கொடுத்து அசத்திய ஜவுளிக்கடை உரிமையாளர்!
கள்ளக்குறிச்சியில் உள்ள பிரபல ஜவுளிக்கடை JKR டெக்ஸ்டைல்ஸ். இந்தக் கடையில் 20க்கும் அதிகமான ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். கடையில் வேலைக்குச் சேரும் நபர்களில் பலர் ஓரிரு வருடத்தில் வேலையை விட்டுச் சென்றுவிடுவது வாடிக்கையாக இருந்துள்ளது. இதனால் கடையை சுமுகமாக நடத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
இச்சூழலில் அந்தக் கடையின் உரிமையாளர் ரமேஷ் பணியாளர்களைக் கவர ஆச்சரியமூட்டும் திட்டம் ஒன்றைத் தீட்டியிருக்கிறார். 10 வருடத்திற்கு மேல் வேலை பார்த்துவரும் சில ஊழியர்களைப் பாராட்ட நினைத்த அவர் நினைத்தார். அதற்காக, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நீண்டகாலமாக வேலையில் இருக்கும் சில ஊழியர்களுக்கு புதிய பைக்கை பரிசாக வழங்கி இருக்கிறார்.
ஊழியர்களின் குடும்பத்தினரையும் அழைத்துவந்து புதிய பைக்கை அவர்களுக்கு வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் ரமேஷ். இந்தச் செயல் மூலம் அந்த ஊழியர்கள் பெருமகிழ்ச்சி அடைந்திருப்பது மட்டுமின்றி, கடைக்கு வந்த வாடிக்கையாளர்களும் JKR டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளரை பாராட்டிச் சென்றுள்ளனர்.