சுமுக முடிவு எட்டப்படுமா? இன்று போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை..!
தமிழகத்தில் ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட முக்கிய போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில், “பொங்கல் பண்டிகையின்போது வேலைநிறுத்தப் போராட்டம் தேவையா? பண்டிகை காலத்தில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது ஏன்?” என்று கேள்வி எழுப்பினர்சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு.மேலும், வேலை நிறுத்தப் போராட்டத்தால் நகர்புற மக்கள் பாதிக்கப்படவில்லை என்றாலும், கிராமங்களுக்கு செல்லும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் போராட்டம் நடத்த உரிமை இல்லை எனக் கூறவில்லை, பண்டிகை நேரத்தில் போராட்டம் நடத்துவது முறையற்றது என்று தான் கூறுகிறோம் என்று தலைமை நீதிபதி தெரிவித்தார். சென்னை உயர் நீதிமன்ற அறிவுறுத்தலை அடுத்து, வேலை நிறுத்தத்தைக் கைவிடுவதாக போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் தெரிவித்தனர்.நிலுவைத் தொகை முழுமையாக வழங்கப்படாவிட்டால் மீண்டும் வேலை நிறுத்தம் தொடரும் என்று தொழிற்சங்கத்தினரும், நீதிமன்ற உத்தரவை முழுமையாக படித்துவிட்டு, முதல்வரின் ஆலோசனையைப் பெற்று ஜனவரி 19ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
பொங்கலை முன்னிட்டு வேலைநிறுத்தத்தைத் தள்ளிவைத்த அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கத்தினருடன் வரும் 19ஆம்தேதி மீண்டும் முத்தரப்புப் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படவுள்ளது. இதில் பங்கேற்க வருமாறு 27 தொழிலாளர் சங்கங்களுக்கும் போக்குவரத்துக் கழகத்தின் எட்டு மண்டல மேலாண்மை இயக்குநர்களுக்கும் தொழிலாளர் நலத் துறை அழைப்பு விடுத்துள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தையானது இன்று 19ஆம்தேதி மதியம் 12 மணியளவில் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் நடைபெறும் என்று தனி இணை ஆணையர் அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையில் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த பேச்சு வார்த்தையில் முடிவுகள் தெரியவரும்.