பீதியில் உலக நாடுகள்..! மனிதர்களை கொல்ல கூடிய கொடிய வைரசை வைத்து சீனா ஆய்வு..

கொரோனா வைரஸின் தாக்கம் பல உலக நாடுகளை புரட்டி போட்டது. அதன் பாதிப்புகளில் இருந்து மக்கள் மீண்டு வருகின்றனர். எனினும் பல நாடுகளில் இயல்பு நிலை முழுமையாக திரும்பவில்லை. இந்த சூழலில், இந்தியா உள்பட பல நாடுகளில் கொரோனாவின் ஜே.என். வகை வைரசின் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. இதனால், மக்களில் பலர் முக கவசங்களை அணிவதும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் பரவலாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், 100 சதவீதம் மனிதர்களை கொல்ல கூடிய திறன் வாய்ந்த கொடிய வைரசை வைத்து சீனா ஆய்வில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. சீன ராணுவத்திடம் இருந்து பயிற்சி பெற்ற மருத்துவர்கள் இதற்கான ஆய்வில் ஈடுபட்டனர். இதன்படி, இந்த புதிய, கொடிய கொரோனா போன்ற வைரசை எலிகள் சிலவற்றுக்கு கொடுத்து பரிசோதனை முயற்சியை தொடங்கி உள்ளனர்.

இதில், எலிகளுக்கு என்ன ஏற்படும் என்று பார்ப்பதற்காக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, 4 எலிகள் தேர்வு செய்யப்பட்டன. அவற்றுக்கு, செயலிழக்க செய்யப்பட்ட வைரசை உட்செலுத்தி பரிசோதனை நடத்தப்பட்டது. இதுதவிர, இதே பரிசோதனையானது வேறு 4 எலிகளுக்கு நடத்தப்பட்டது. ஆனால், அவற்றுக்கு வைரசை உட்செலுத்திடாமல் மற்ற அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டன.

இதில், ஆச்சரியம் அளிக்கும் வகையில், வைரசால் தொற்று ஏற்பட்ட அனைத்து எலிகளும் 7 முதல் 8 நாட்களில் உயிரிழந்து விட்டன. இந்த ஆய்வின்போது, முதல் 5 நாட்களில் எலிகளின் எடை தொற்று ஏற்பட்ட பின்னர் குறைந்து போனது. அதன்பின்பு, அவற்றின் இயக்கமும் மந்தமடைந்தது. அவற்றின் கண்களும் வெளிறி காணப்பட்டன.

எலிகளில் முதல் 3 நாட்களில் பாதிப்பு குறைவாக காணப்பட்டபோதும், அடுத்த 3 நாட்களில் பல முக்கிய உறுப்புகளில் தொற்று பரவி பாதிப்பு உண்டாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வைரசானது, எலிகள் தவிர மனிதர்களிலும் 100 சதவீதம் தீவிர தொற்றும் மற்றும் பாதிப்பு ஏற்படுத்தி உயிரிழப்புகளை ஏற்படுத்த கூடிய திறன் படைத்தது என தெரிய வந்துள்ளது.

இந்த, சார்ஸ் கொரோனா வைரசுடன் தொடர்புடைய கொடிய வைரசானது எலிகளில் 100% உயிரிழப்பு ஏற்படுத்த கூடியது. இதனால், மனிதர்களுக்கு பரவும்போது அதுவும் கொடிய தாக்கங்களை ஏற்படுத்த கூடிய ஆபத்து உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், சீன ஆய்வாளர்கள் கூறும்போது, நடப்பு ஜனவரியில் ஜே.என்.-1 வகை கொரோனா வைரசால் கொரோனா பாதிப்பு அதிகரிக்க கூடும் என எச்சரிக்கையும் விடுத்து உள்ளனர். சீனாவின் உகான் நகரில் ஆய்வகத்தில் வைத்து கொரோனா வைரசானது உற்பத்தி செய்யப்பட்டது என உலக நாடுகள் குற்றச்சாட்டு தெரிவித்து இருந்தன. இதனால், உலக சுகாதார அமைப்பும் அதுபற்றிய அறிக்கைகளை அளிக்கும்படி சீனாவிடம் கேட்டு கொண்டது. ஆனால், இதனை மறுத்த சீனா அதற்கு உடன்படாமலேயே இருந்தது.

இந்த நிலையில், மனிதர்களில் 100 சதவீதம் உயிரிழப்பை ஏற்படுத்த கூடிய கொடிய வைரசை வைத்து சீனா ஆய்வு செய்து வருவது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. உலக நாடுகள் இடையே பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. இந்த குளிர்பருவத்திலும் மற்றும் அடுத்து வரும் இளவேனில் காலத்திலும் பல்வேறு சுவாச நோய்கள் பரவ கூடும் என்று தேசிய சுகாதார ஆணையம் சுட்டி காட்டியுள்ளது கவனிக்கத்தக்கது. இதனால், தொற்று பரவாமல் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *