Radhika: ராதிகாவை கொஞ்சிய வரலட்சுமி சரத்குமார்… குடும்பத்துடன் கொண்டாட்டம்… ட்ரெண்டாகும் போட்டோ
சென்னை: கோலிவுட்டின் நட்சத்திரத் தம்பதிகளில் சரத்குமார், ராதிகா முக்கியமானவர்கள். இவர்கள் இருவரும் 2001ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.
சரத்குமாரின் முதல் மனைவிக்கு பிறந்த மகள் வரலட்சுமி, ராதிகாவை கொஞ்சி மகிழ்ந்து போட்டோ எடுத்துக்கொண்டது வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படத்தில் சரத்குமாரும் உடனிருப்பது குறிப்பிடத்தக்கது.
ராதிகாவை கொஞ்சிய வரலட்சுமி சரத்குமார்
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகரான சரத்குமார், இப்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். விஜய்யுடன் வாரிசு, மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன், அசோக் செல்வனுடன் போர் தொழில் என மீண்டும் சூப்பர் ஹிட் படங்களாக நடித்து வருகிறார். இவரது மகள் வரலட்சுமியும் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகையாக வலம் வருகிறார்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் பிஸியாக நடித்து வரும் வரலட்சுமி, சரத்குமாரின் முதல் மனைவிக்கு பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சரத்குமாரும் அவரது முதல் மனைவி சாயாவும் 2000ம் ஆண்டு விவாகரத்துப் பெற்று பிரிந்தனர். அதன்பின்னர் நடிகை ராதிகாவை திருமணம் செய்துகொண்டார் சரத்குமார். சினிமா, சீரியல் என இரண்டிலும் வெற்றி மேல் வெற்றிகளை குவித்து பல நூறு கோடிகளுக்கு அதிபதியாக வலம் வருகிறார் ராதிகா.
சரத்குமார் – ராதிகா தம்பதியினருக்கும் மகனும் மகளும் உள்ளனர். இந்நிலையில் ராதிகாவுடன் வரலட்சுமி எடுத்துக்கொண்ட க்யூட்டான போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது. ராதிகாவும் வரலட்சுமியும் ஒருவரையொருவர் கன்னங்கள் உரசியபடி நிற்க, அவர்களுக்குப் பின்னால் சரத்குமார் இருக்கிறார். மூவருமே ஒரே குடும்பமாக இந்தப் போட்டோவில் போஸ் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.