வாய்ப்புக்கு நன்றி.. 4 வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனைகள் ஒரே நேரத்தில் ஓய்வு அறிவிப்பு.. என்ன நடந்தது?

வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியை சேர்ந்த நான்கு வீராங்கனைகள் கூட்டாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து உள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணியில் சுமார் 20 ஆண்டு காலம் ஆடிய அனிசா முகமது, 15 ஆண்டுகள் ஆடிய ஷகீரா செல்மான், மற்றும் இரட்டை சகோதரிகளான கைசியா நைட், கைஷோனா நைட் ஆகிய நால்வரும் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளனர். தங்களுக்கு வாய்ப்பு அளித்ததற்கு நன்றி என வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அமைப்புக்கு நன்றி கூறி நால்வரும் ஒன்றாக ஓய்வை அறிவித்தது கிரிக்கெட் உலகில் பேசுபொருளாக மாறி இருக்கிறது.

அனிசா முகமது 2003ஆம் ஆண்டு, தனது 15 வயதில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியில் அறிமுகம் ஆனார். வலது கை சுழற் பந்துவீச்சாளரான அவர் 141 ஒருநாள் போட்டிகளில் 180 விக்கெட்களும், 117 டி20 போட்டிகளில் 125 விக்கெட்களும் எடுத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக டி20 போட்டிகளில் முதல் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த சாதனையை செய்துள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆடவர் மகளிர் அணிகளை சேர்த்து முதன் முதலில் 100 விக்கெட்கள் வீழ்த்தியவர் இவர்தான். கடைசியாக 2022 ஒருநாள் போட்டி உலகக்கோப்பையில் பங்கேற்று இருந்தார்.

ஷகீரா செல்மான் மித வேக பந்துவீச்சாளர் ஆவார். இவர் 2008ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். அவர் 100 ஒருநாள் போட்டிகளில் 82 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். 96 டி20 போட்டிகளில் 51 விக்கெட்களும் வீழ்த்தி இருக்கிறார். கடைசியாக 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மகளிர் டி20 உலகக்கோப்பையில் பங்கேற்றார்.

இரட்டை சகோதரிகளான சகோதரிகளான கைசியா நைட் மற்றும் கைஷோனா நைட் 2011 மற்றும் 2013இல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அறிமுகம் ஆகி இருந்தனர். பேட்டிங் திறன் கொண்ட இவர்களில் கைசியா 87 ஒருநாள் போட்டிகளில் 1327 ரன்களும், 70 டி20 போட்டிகளில் 801 ரன்களும் எடுத்துள்ளார். கைஷோனா 51 ஒருநாள் போட்டிகளில் 851 ரன்களும், 55 டி20 போட்டிகளில் 546 ரன்களும் எடுத்துள்ளார்.

2016 டி20 உலகக்கோப்பை வென்ற அணியில் இடம் பெற்ற இந்த நால்வரும் ஒரே நேரத்தில் ஓய்வு அறிவிப்பை கூட்டாக வெளியிட்டு இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இவர்கள் நால்வருக்கும் கடந்த சில மாதங்களாக சர்வதேச அணியில் இடம் கிடைக்கவில்லை. அதன் காரணமாக அவர்கள் ஓய்வை அறிவித்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *