One World vs One Family – மின்னல் வேக பேட்டிங், பவுலிங்.. ஜொலித்த யுவராஜ்.. ஆனா இப்படி ஆகிப்போச்சே

சச்சின் டெண்டுல்கர் மற்றும் யுவராஜ் சிங் பங்கு பெற்ற ஒன் வேர்ல்டு – ஒன் ஃபேமிலி கண்காட்சி கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. அந்தப் போட்டியில் யுவராஜ் சிங் ஆல் – ரவுண்டராக ஜொலித்தார்.
இந்தப் போட்டியில் யுவராஜ் சிங்கின் ஒன் ஃபேமிலி அணியில் சமிந்தா வாஸ், முத்தையா முரளிதரன் உள்ளிட்டோர் ஆடினர். முதலில் பேட்டிங் செய்த அந்த அணிக்கு டேரன் மேடி அதிரடி துவக்கம் அளித்து 41 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார். மிடில் ஆர்டரில் யூசுப் பதான் 24 பந்துகளில் 38 ரன்கள் குவித்தார்.
ஃபினிஷராக ஆறாம் வரிசையில் களமிறங்கிய யுவராஜ் சிங் இரண்டு சிக்ஸ், இரண்டு ஃபோர் அடித்தார். மின்னல் வேகத்தில் பறந்த பவுண்டரியை பார்த்துவுடன் 2007 டி20 உலகக்கோப்பை, 2011 ஒருநாள் போட்டி உலகக்கோப்பையின் பழைய நினைவுகள் கண் முன் வந்து போனது. அந்த அளவுக்கு ஃபினிஷராக அதிரடி ஆட்டத்தில் உச்சகட்டத்தை தொட்டார் யுவராஜ் சிங்.
10 பந்துகள் மட்டுமே சந்தித்த அவர் இரண்டு சிக்ஸ், இரண்டு ஃபோர் அடித்து மொத்தம் 23 ரன்களை குவித்தார். 230 ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் ஆடிய ஆட்டம் இன்றைய தலைமுறை டி20 பேட்ஸ்மேன்களுக்கு நிகராக இருந்தது. அவரது அதிரடி ஆட்டத்தால் 160 – 170 ரன்களை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட ஒன் ஃபேமிலி அணி 20 ஓவர்களில் 180 ரன்களை எட்டியது.
அடுத்து சச்சினும் ஒன் வேர்ல்டு அணி பேட்டிங் செய்தது. சச்சின் 16 பந்துகளில் 27 ரன்கள் குவித்து தன் பங்கிற்கு அதிரடி ஆட்டத்தை வெளிக்காட்டினார். ஆல்விரோ பீட்டர்சன் 50 பந்துகளில் 74 ரன்கள் குவித்து அந்த அணியை வெற்றிக் கோட்டுக்கு அருகே அழைத்துச் சென்றார். யுவராஜ் சிங் பந்துவீச்சில் கலக்கினார். 4 ஓவர்களில் 26 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.
இந்தப் போட்டியில் சச்சின் அணியில் பந்து வீசிய மான்டி பனேசருக்கு அடுத்து மிகக் குறைவாக ரன்கள் கொடுத்தவர் யுவராஜ் சிங் தான். கடைசியில் இர்பான் பதான் தன் அண்ணன் யூசுப் பதான் வீசிய கடைசி ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்து தன் அணியை வெற்றி பெற வைத்தார். பேட்டிங், பந்துவீச்சில் கலக்கிய யுவராஜ் சிங்கிற்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. எனினும், ரசிகர்கள் சச்சின் மற்றும் யுவராஜ் சிங்கின் ஆட்டத்தை ரசித்தனர். நீண்ட காலம் கழித்து கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற இருவரும் சிறப்பான ஆட்டத்தை ஆடி இருந்தனர்.