`ஜல்லிக்கட்டும் சனாதனமா?’ – நிர்மலா சீதாராமன் பற்றவைத்த புதிய நெருப்பும் ரியாக்ஷனும்!
சர்ச்சையைக் கிளப்பிய நிர்மலா சீதாராமன்!
சமூக வலைத்தளமான ட்விட்டரில் டி.எஸ்.கிருஷ்ணன் என்பவர் ‘ஜல்லிக்கட்டு என்ற சனாதனத் திருநாள்’ என்று ஒரு பதிவை பகிர்ந்திருந்தார்.
அந்த பதிவைப் பகிர்ந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “சங்ககால தமிழ் இலக்கியமான கலித்தொகையில் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் பலராமர், ஸ்ரீகிருஷ்ணர், சிவன், முருகன் உள்ளிட்ட தெய்வங்களை ஒப்பிட்டு உவமைப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த கால மக்களின் வாழ்க்கை அப்படி இருக்கிறது. ஆனால், அதனை வேறுபடுத்திப் பார்ப்பது தவறான நோக்கம், பிரிவினைவாதம் ஆகும் என்று டி.எஸ்.கிருஷ்ணன் சுட்டிக்காட்டுகிறார்” என்று பதிவு செய்திருந்தார்.
நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமனின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மதுரை எம்.பி சு.வெங்கடேசன் “ஏறுதழுவல் என்னும் ஜல்லிக்கட்டின் வரலாற்றை மாற்ற நினைக்கிறது ஒரு கூட்டம். “தீய உள்நோக்கங்கொண்ட பிரிவினைவாதம்” என நிர்மலா சீதாராமன் கூறுகிறார். உலகம் அதிர உரக்கச்சொல்வோம். கீழடி அகழாய்வு தொடங்கி அலங்காநல்லூர் வாடிவாசல் வரை “தமிழும் திமிலும்” எமது பேரடையாளம்.” எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
சனாதன தர்மத்தினுடைய ஒரு பகுதி!
இந்த விவகாரம் குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன், “ஒவ்வொரு ஜல்லிக்கட்டுக்கு ஒவ்வொரு கோயிலுடன் தொடர்புடையது. இதனை நாடாளுமன்ற உறுப்பினர். சு.வெங்கடேசன் மறுக்க முடியுமா… இதனை இந்த நாட்டின் மரபு, பண்பாடு, மதச்சார்பின்மை என்ற பெயரில் திமுகவும், கம்யூனிஸ்ட்டுகளும் இந்து மதத்தின் அடையாளம், பண்பாடு, கலாச்சாரத்தைச் சீரழித்து அவமானப்படுத்துவதை வேலையாக வைத்திருக்கிறார்கள்.