முருகன் எங்கிருந்து பழனிக்கு தாண்டிக் குதித்தார் தெரியுமா?

முருகனுக்கு ஆறு படை வீடுகள் இருக்கலாம். ஆனால், அறுபடை வீட்டை விட சிறப்பு வாய்ந்த முருகன் ஆலயங்கள் பலவும் குன்றின் மீது உள்ளன.

அப்படி ஒரு சிறப்புமிக்க ஆலயம்தான் தாண்டிக்குடி முருகன் கோயில்.

இத்தலத்தில் முருகன் பாலமுருகனாக அருள்புரிகிறார். கயிலாயத்திலிருந்து கோபித்துக் கொண்டு பழனி திருத்தலத்துக்கு வருவதற்கு முன்பு முருகன் தாண்டிக்குடி வருகிறார். முருகன் இங்கிருக்கும்போதுதான் அகஸ்தியரின் சீடரான இடும்பன் கயிலாயத்திலிருந்து சிவகிரி, சக்திகிரி என இரண்டு மலைகளை சுமந்து கொண்டு பழனி திருத்தலத்துக்கு வந்து சேருகிறார். இதை அறிந்த முருகன் இந்த இரண்டு மலைகளில் ஒன்று தனக்கு இருப்பிடமாக்கிக் கொள்ள ஏற்றது எனக் கருதி தாண்டிக் குதிக்கிறார். இதன் காரணமாகவே இந்த இடம், ‘தாண்டிக்குதி’ என்றழைக்கப்பட்டு பின்னர் அதுவே மருவி, ‘தாண்டிக்குடி’ என ஆனது.

கோயில் நுழைவாயில்

பழனிக்கு முருகப்பெருமான் செல்வதற்கு முன்பு இங்கிருந்துதான் சென்றார் என்பதால், பழனிக்கு செல்பவர்கள் இங்குள்ள தாண்டிக்குடி பாலமுருகனை தரிசித்த பிறகு சென்றால்தான் முழுமையான பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இக்கோயில் தீர்த்தமாக அங்குள்ள பாறையிலேயே சிறு பள்ளத்தில் என்றுமே வற்றாத தீர்த்தம் ஒன்று உள்ளது. இக்கோயிலில் இருந்து 75 அடி தொலைவில் ஒரு மண்மேடு உள்ளது. இந்த மண்ணே இக்கோயிலின் திருமண்ணாக வாய்த்திருக்கிறது. இங்கு வரும் பக்தர்களுக்கு இந்தத் திருமண்ணே விபூதி பிரசாதமாக அளிக்கப்படுகிறது.

இந்தத் தலத்தில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் பாலமுருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் பாலை பிரசாதமாக வாங்கி அருந்தினாள் அவர்கள் வீட்டிலும் பாலகன் நிச்சயம் வருவான் என்று பக்தர்கள் மனம் உருகி கூறுகிறார்கள்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *