வீட்டு வேலைக்கு வந்த இளம்பெண்ணுக்கு சூடுபோட்டு சித்திரவதை.. திமுக எம்எல்ஏவின் மகன், மருமகன் மீது வழக்கு.!
வீட்டு வேலைக்கு வந்த பெண்ணை கொடுமைப்படுத்தியதாக பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மற்றும் அவருடைய மனைவி மெர்லினா மீது நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் திருநருங்குன்றம் காலனி பகுதியை சேர்ந்த வீரமணி- செல்வி தம்பதி. இவர்களின் மகள் ரேகா (19). 12ம் வகுப்பு படித்த இந்த மாணவி குடும்ப சூழ்நிலை காரணமாக சென்னையில் வாட்ச்மேன் வேலை பார்த்து வரும் உறவினர் வழியாக சித்ரா என்ற புரோக்கர் மூலம் கடந்த ஏப்ரல் மாதம் 26-ம் தேதி சென்னை பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதி வீட்டில் வீட்டு வேலைக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் பொங்கல் விழாவிற்காக போகிபண்டிகை அன்று இரவு எம்எல்ஏ குடும்பத்தினர் தங்களது காரில் ரேகாவை அழைத்துச் வந்து சொந்த ஊரான திருநரங்குன்றத்தில் உள்ள வீட்டில் விட்டுவிட்டு சென்றுள்ளனர். இரண்டு நாள் கழித்து காணும் பொங்கல் அன்று ரேகா தன் தாயிடம் கடந்த சில மாதங்களாக எம்எல்ஏ மகன் ஆண்ரோ மதிவாணன் மருமகள் மெர்லினா ஆகியோர் என்னை அடித்து உதைத்து உடம்பில் சிகரெட்டால் சூடு வைத்ததாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து அந்த பெண்ணை உளுந்தூர்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர் மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் அம்மாவட்ட போலீசார் விசாரணை நடத்தி இந்த பிரச்சினை திருவான்மியூர் பகுதியில் நடைபெற்றதால் திருவான்மியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் இளம்பெண் பாதிக்கப்பட்டுள்ளதால் இச்சம்பவம் குறித்து நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே, சிறுமியை கொடுமைப்படுத்திய எம்.எல்.ஏ.வின் மகன், மருமகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ, மருமகள் மெர்லினா மீது நீலாங்கரை போலீசார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.