பில்கிஸ் பானு வழக்கு: குற்றவாளிகளின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்!
பில்கிஸ் பானு வழக்கில் தொடர்புடைய 11 ஆயுள் தண்டனை கைதிகள் குஜராத் அரசால் கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டனர். ஆயுள் தண்டனை காலமான 14 ஆண்டுகள் பூர்த்தி செய்தது, வயது, குற்றத்தின்தன்மை, சிறையில் நன்நடத்தை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு சிறை அறிவுரை குழுவின் பரிந்துரைப்படி உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்தின் அடிப்படையில், மாநில பொதுமன்னிப்பு கொள்கையின் அடிப்படையிலும் விடுவிக்கப்படுவதாக குஜராத் மாநில அரசு தெரிவித்தது.
குஜராத் மாநில அரசின் இந்த முடிவு நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பில்கிஸ் பானு தரப்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் பில்கிஸ் பானுவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.வி. நாகர்தனா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு, 11 குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ததை எதிர்த்து பில்கிஸ் பானு தாக்கல் செய்த மனு செல்லுபடியாகும் என கூறியது.
மேலும், பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளை விடுவித்த குஜராத் மாநில அரசின் முடிவை ரத்து செய்து உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், குற்றவாளிகள் 11 பேரும் இரண்டு வாரத்துக்குள் அதாவது ஜனவரி 21ஆம் தேதிக்குள் சிறை அதிகாரிகள் முன்பு சரணடைய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
இந்த நிலையில், பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகள் 11 பேரும் சரணடைவதில் இருந்து 4 வாரங்கள் அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். உடல்நலம், வயதானவர்களை பராமரிக்க வேண்டியது போன்ற காரணங்களை சுட்டிக்காட்டி இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளின் கோரிக்கையை நிராகரித்ததுடன், 4 வாரங்கள் அவகாசம் கோரிய அவர்களது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. குற்றவாளிகள் 11 பேரும் வருகிற 21ஆம் தேதிக்குள் சரணடைய வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு நடைபெற்ற கலவரத்தின்போது, பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி, கும்பல் ஒன்றால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு செய்யப்பட்டார். பில்கிஸ் பானுவின் 3 வயது பெண் குழந்தையை அவரிடம் இருந்து பிடுங்கி அருகில் இருந்த கல்லில் ஒங்கி அடித்து அக்கும்பல் கொன்றது. அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரையும் அக்கும்பல் கொன்றது. இந்த சம்பவம நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
நீண்ட நாட்கள் நடைபெற்ற இந்த வழக்கில் தொடர்புடைய, 11 குற்றவாளிகளுக்கு 2008ஆம் ஆண்டில் மும்பை சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது (12 பேரில் ஒருவர் இறந்து போனார்).
குஜராத் அரசால் விடுவிக்கப்பட்ட 11 குற்றவாளிகளின் பெயர் ஜஸ்வந்த் நாய், கோவிந்த்பாய் நாய், ஷைலேஷ் பட், ரதியேஷாம் ஷா, பிபின் சந்திர ஜோஷி, கேசர்பாய் வோஹானியா, பிரதீப் மோர்தியா, பகபாய் வோஹானியா, ராஜூபாய் சோனி, மித்தேஷ் பட் மற்றும் ரமேஷ் சந்தனா என்பதாகும்.