IIT Student Death: ஐ.ஐ.டி.யில் தொடரும் மர்மம்! ஒரே மாதத்தில் கதிகலங்க வைக்கும் மூன்றாவது தற்கொலை – என்னாச்சு?
உயர் கல்வி நிறுவனங்களில் சாதியின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதாகவும், இதன் காரணமாக மாணவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாவதாக தொடர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது.
மாணவி தற்கொலை:
இந்த நிலையில், தற்போது மாணவி ஒருவர் விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். காவல்துறையின் கூறுப்படி, பிஎச்டி படித்து வந்த மாணவி பிரியங்கா தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தும்காவ் பகுதியைச் சேர்ந்தவர் பிரியங்கா.
பிரியங்காவின் தந்தை நரேந்திர ஜெய்ஸ்வால், அவரது விடுதியின் மேலாளரை தொடர்பு கொண்டு, தனது மகள் அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை என்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து, விடுதி மேலாளர் ரிது பாண்டே பிரியங்காவின் அறைக்கு சென்று கதவை தட்டியிருக்கிறார்.
நீண்ட நேரம் கதவு திறக்கப்படாததை அடுத்து, கதவை உடைத்து உள்ளே சென்றிருக்கிறார். அங்கு, மாணவி பிரியங்கா மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டிருக்கிறார். இதனையடுத்து, விடுதி மேலாளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர், மாணவி பிரியங்காவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
ஒரு மாதத்தில் 3 பேர்:
ஐஐடி-கான்பூர் நிர்வாகத்தின் ஆதாரங்களின்படி, மாணவி பிரியங்கா டிசம்பர் 29, 2023 அன்று கெமிக்கல் இன்ஜினியரிங் நிறுவனத்தின் பிஎச்டி திட்டத்தில் சேர்ந்திருக்கிறார். மேலும், ஒரு மாதத்தில் ஐஐடி கான்பூரில் தற்கொலை செய்து கொண்ட மூன்றாவது மாணவி இவர்.
ஜனவரி 11ஆம் தேதி மாணவி விகாஸ் குமார் மீனா என்பவர் விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக டிசம்பர் 19ஆம் தேதி முதுகலை ஆய்வாளர் பல்லவி சில்கா என்பவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.