சோகம்… 8,000 டன் தானியங்கள் மழையில் நாசம்… அரசு உணவு பாதுகாப்பு குடோன் வெள்ளத்தில் பாதிப்பு!
யாருக்குமே பயன்படாமல், மொத்தமாக சுமார் 8,000 டன் தானியங்கள், தூத்துக்குடி பாளையங்கோட்டை நெடுஞ்சாலை அருகே அமைந்திருக்கும் உணவு பாதுகாப்புக்கழக குடோனில் சேமித்து வைக்கப்பட்டிருந்த நிலையில், மொத்தமாக மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.
ஒரு டன் என்பது 1,000 கிலோ. அப்படி 8,000 டன் கோதுமை போன்ற தானியங்கள் இப்படி பொதுமக்களுக்கு பயன்படாத வகையில் மழை நீரில் நாசமானது.
வரலாறு காணாத மழையால் தூத்துக்குடி மாவட்டமே சின்னாபின்னமாக சிதைந்துள்ளது. குறிப்பாக தூத்துக்குடி மாநகரம் மற்றும் தாமிரபரணி கரையோர பகுதிகள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. மாவட்டம் முழுவதும் பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. தற்போது மழை வெள்ளம் வடிய, வடிய பாதிப்புகளின் உக்கிரம் வெளியே தெரிய தொடங்கியிருக்கிறது.
இந்நிலையில், தூத்துக்குடி பாளையங்கோட்டை நெடுஞ்சாலையில் உணவு பாதுகாப்பு கழகத்தின் குடோனின் சேமித்து வைக்கப்பட்டிருந்த அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்கள் கடந்த 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கி சேதமாகியுள்ளன.
சுமார் 8 ஆயிரம் டன் அரிசியும் 500 டன் கோதுமையும் சேதமானதாக கூறப்படுகிறது. இதனை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென உணவு பாதுகாப்பு கழகத்தின் ஊழியர் சங்கத்தினர், மாநில அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.