பக்தர்கள் அதிர்ச்சி..! ராமேஸ்வரத்தில் பக்தர்களுக்கு தடை
சென்னையில் கேலோ விளையாட்டு போட்டிகளை தொடங்கிவைக்க இன்று மாலை வருகை தருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. இதனையடுத்து திருச்சிக்கு செல்லும் அவர் திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். திருச்சியிலிருந்து மதுரைக்கு செல்லும் பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் செல்கிறார். நாளை பிற்பகலில் ராமேசுவரத்திற்குச் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள புகழ்பெற்ற ராமநாத சுவாமி கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்து, அங்கு நடைபெறும் பூஜையில் பங்கேற்கிறார். அதன் பின்னர் ராமநாதசுவாமி கோவிலை சுத்தப்படுத்தும் பணியை செய்கிறார். நாளை இரவு ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் பிரதமர் மோடி தங்குகிறார்.
ஜனவரி 21ஆம் தேதி கடலில் நீராடிவிட்டு பின்னர் கடலில் புனித தீர்த்தங்களைச் சேகரிக்கும் அவர், புனிதநீர் கலசங்களுடன் டெல்லி புறப்படுகிறார். இந்நிலையில் பிரதமர் வருகையையொட்டி தமிழ்நாட்டில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பிரதமர் மோடி வருகை எதிரொலியாக ராமேஸ்வரத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ராமநாதசுவாமி கோயிலின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலா பயணிகள், பக்தர்கள், பொதுமக்கள் தரிசனம் மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர், 22ஆம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்குச் செல்கிறார் பிரதமர் மோடி. ராமேஸ்வரத்தில் இருந்து எடுத்துச் செல்லும் தீர்த்தத்தை அயோத்திக்கு கொண்டு செல்கிறார் பிரதமர் மோடி.