பார்ப்பதற்கு தன்னைப்போலவே இருந்த அழகிய இளம்பெண்ணை கொடூரமாகக் கொன்ற பெண்: எதற்காக தெரியுமா?
ஜேர்மனியில் வாழும் பெண் ஒருவர், பார்ப்பதற்கு தன்னைப்போலவே காட்சியளித்த அழகிய இளம்பெண் ஒருவரைக் கொலை செய்தார்.
காரில் கண்டுபிடிக்கப்பட்ட இளம்பெண்ணின் உடல்
2022ஆம் ஆண்டு, ஆகத்து மாதம், தெற்கு ஜேர்மனியில் கார் ஒன்றில் அழகிய இளம்பெண் ஒருவரின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அது ஷாராபான் (Sharaban K, 23) என்னும் பெண்ணுடைய உடல் என அவரது பெற்றோரால் அடையாளம் காட்டப்பட்டது.
உடற்கூறு ஆய்வில் ஏற்பட்ட சந்தேகம்
Ingolstadt என்ற இடத்தில், மெர்சிடிஸ் காரில் கண்டுபிடிக்கப்பட்ட ஷாராபான் என்னும் அந்தப் பெண் ஈராக் நாட்டவர் ஆவார். அவர் ஜேர்மனியின் Munich நகரில் வாழ்ந்துவந்தார்.
மகள் எதனால் கொல்லப்பட்டார் என பெற்றோர் திகைத்துப்போயிருக்க, உடற்கூறு ஆய்வு சில அதிர்ச்சியளிக்கும் இரகசியங்களை வெளிப்படுத்தியது. இறந்த பெண்ணின் உடலில் குத்தப்பட்டிருந்த டாட்டூக்கள் சந்தேகத்தை உருவாக்கின.
கடைசியில், அந்த உடல் ஷாராபானுடையதே அல்ல. அது, கதீஜா (Khadidja O, 23) என்னும் அழகுக்கலை நிபுணருடைய உடல் என்பது தெரியவந்தது. அல்ஜீரியா நாட்டு இளம்பெண்ணான கதீஜா, ஜேர்மனியிலுள்ள Heilbronn என்ற இடத்தில் வாழ்ந்துவந்துள்ளார்.
விசாரணையில் வெளிவந்த திடுக் தகவல்கள்
பொலிசாரின் தீவிர விசாரணையில், கொல்லப்பட்டது கதீஜா என்னும் பெண் என்றும், ஷாராபான் உயிருடன் இருக்கிறார், கதீஜாவைக் கொன்றதே ஷாராபான்தான் என்பதும் தெரியவந்ததால் கடும் அதிர்ச்சி ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து, பவேரிய பொலிசாரால் Sheqir K (23) என்பவரும், ஷாராபானும் கைது செய்யப்பட்டார்கள். தொடர் விசாரணையில், கட்டுப்பாடான தனது ஈராக்கிய குடும்பத்தைவிட்டு தப்பித் தலைமறைவாக விரும்பிய ஷாராபான், தன்னைப் போலவே காணப்படும் வேறொரு இளம்பெண்ணைக் கொலை செய்துவிட்டு தலைமறைவாகிவிட திட்டமிட்டது தெரியவந்தது.