உலகப் போரை தூண்டும் மூன்று அச்சுறுத்தல்கள்: பிரித்தானிய அமைச்சர் வெளியிட்ட தகவல்
ரஷ்யா, மத்திய கிழக்கில் ஏவுகணை தாக்குதல், சீனாவின் ரகசிய நடவடிக்கைகள் என மூன்றாம் உலகப் போருக்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளதாக பிரித்தானிய அமைச்சர் ஒருவர் அச்சம் தெரிவித்துள்ளார்.
எதிரிகளை எதிர்கொள்ள
பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ் தெரிவிக்கையில், சர்வதேச நாடுகளின் உறவுகள் ஒரு புதிய சகாப்தத்தில் நுழைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
நமது எதிரிகளை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர், நமது நட்பு நாடுகளை வழிநடத்தத் தயாராக இருக்க வேண்டும் என்றும், அழைப்பு வரும்போதெல்லாம் நம் தேசத்தைப் பாதுகாக்கத் தயாராக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய சூழலில் ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் நாடுகளால் பெரும் அச்சுறுத்தல் எழுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், பகுத்தறிவற்றவர்கள் என்றும் சாடியுள்ளார். போர் தொடர்பில் பிரித்தானிய அரசியல்வாதிகள் குறிப்பிடுவது இது முதல்முறையல்ல.
கடந்த ஆண்டு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் தெரிவிக்கையில், 2030ல் பிரித்தானியா போரை முன்னெடுக்கும் சூழலில் இருக்கும் என்றார். மூன்று நாட்களில் முடிவுக்கு வரும் என கூறப்பட்ட ரஷ்ய – உக்ரைன் போர் தற்போது 700 நாட்களை நெருங்கி வருகிறது.
சமீபத்தில் உக்ரைன் சில பிராந்தியங்களை மீட்டாலும், அபாயம் இன்னும் நீடித்தே வருகிறது. ஹமாஸ் படைகள் முன்னெடுத்த அக்டோபர் 7 தாக்குதலுக்கு பின்னர் உலக நாடுகளின் மொத்த கவனமும் மத்திய கிழக்கில் உள்ளது.
காஸா மீது இஸ்ரேல் கொடூர தாக்குதலை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. ஹமாஸ் படைகளுக்கு ஆதரவாக நேரிடையாக களத்தில் இறங்காத ஈரானிய ஆதரவு ஹவுதி படைகள் செங்கடலில் வணிக கப்பல்கள் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது.