இந்தியர்களுடன் சென்ற வணிக கப்பல் மீது டிரோன் தாக்குதல்
புதுடெல்லி: ஏடன் வளைகுடாவில் மார்ஷல் தீவின் கொடியுடன் நேற்று முன்தினம் இரவு ஜென்கோ பிக்கார்டி என்ற சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்தது.
9 இந்தியர்கள் உட்பட மொத்தம் 22 ஊழியர்கள் இந்த கப்பலில் பயணித்தனர். இந்த கப்பல் ஏடன் துறைமுகத்தில் இருந்து 60 நாட்டிக்கல் தொலைவில் இருந்தபோது கப்பல் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் கப்பலின் ஒரு பகுதி சேதமடைந்தது. தாக்குதல் குறித்து உடனடியாக வளைகுடாவில் நிறுத்தப்பட்டு இருந்த இந்திய கடற்படையின் ஏவுகணை தாக்கி கப்பலான ஐஎன்எஸ் விசாகப்பட்டினத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்குள் ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் கப்பல் மூலமாக தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடற்படை நிபுணர்கள் கப்பலின் சேதமடைந்த பகுதியை நேற்று காலை பார்வையிட்டனர். அந்த பகுதியை போக்குவரத்துக்கு பாதுகாப்பானதாக மாற்றினார்கள். இதனை தொடர்ந்து ஜென்கோ பிக்கார்டி அடுத்த துறைமுகத்துக்கு புறப்பட்டு சென்றது.