கிடப்பில் கிடக்கும் துருவ நட்சத்திரம்.. ஆனால் GVMமிற்கு ஆறுதல் கொடுத்த “அந்த” படம் – வெளியான அப்டேட்!
தமிழ் சினிமாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான மாதவனின் “மின்னலே” என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக களம் இறங்கியவர் தான் கௌதம் வாசுதேவ் மேனன். இன்றளவும் இவருடைய திரைப்படங்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவருடைய இயக்கத்தில் வெளியான “காக்க காக்க”, “வேட்டையாடு விளையாடு”, “வாரணம் ஆயிரம்”, “விண்ணைத்தாண்டி வருவாயா” மற்றும் “என்னை அறிந்தால்” போன்ற பல திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக மாறி உள்ளது.
அதிலும் குறிப்பாக கடந்த 2010 ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்திற்கு இன்றளவும் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக கடந்த 2022 ஆம் ஆண்டு பிரபல நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தின் முதல் பாகத்தை இயக்கியதற்கு பிறகு இவர் எந்த திரைப்படத்தையும் இதுவரை இயக்கி வெளியிடவில்லை.
அதன் பிறகு தனது நடிப்பில் முழு கவனத்தை செலுத்தி வந்த கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் சென்ற ஆண்டு இறுதியில் விக்ரமின் “துருவ நட்சத்திரம்” திரைப்படம் வெளியாக இருந்தது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாகவே அந்த திரைப்படம் எதிர்கொள்ளும் சில தயாரிப்பு ரீதியான சிக்கல்கள் காரணமாக அந்த படம் வெளியாகாமல் இருந்து வருகிறது.
இந்நிலையில் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் பிரபல வேல்ஸ் நிறுவனம் தயாரித்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி வெளியாக இருந்த “ஜோஸ்வா இமைபோல் காக்க” திரைப்படம் எதிர்வரும் பிப்ரவரி மாதம் வெளியாக உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் வருண் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.