விமான சரக்கு போக்குவரத்து துறையில் இந்தியா அதிவேக வளர்ச்சி: பிரதமர் மோடி பெருமிதம்!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் புதிய போயிங் இந்தியா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மைய வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ரூ. 1,600 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள 43 ஏக்கர் பரப்பளவிலான இந்த வளாகம் அமெரிக்காவிற்கு வெளியே போயிங் நிறுவனத்தின் மிகப்பெரிய முதலீடாகும்.
நாட்டில் வளர்ந்து வரும் விமானத் துறையில் இந்தியா முழுவதிலும் இருந்து அதிகமான பெண் குழந்தைகள் நுழைவதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட போயிங் சுகன்யா திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். சுகன்யா திட்டப் பயனாளிகளுடன் கலந்துரையாடிய பிரதமர், அனுபவ மையத்தையும் பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் சாதனைகளுடன் நமது எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் இணைக்கும் நகரமாக பெங்களூரு திகழ்கிறது என்றும், இந்தியாவின் தொழில்நுட்ப ஆற்றலை உலகளாவிய தேவைகளுடன் இந்த நகரம் இணைக்கிறது என்றும் கூறினார்.
போயிங்கின் புதிய தொழில்நுட்ப வளாகம் இந்த நம்பிக்கையை வலுப்படுத்தப் போகிறது என்று கூறிய பிரதமர், புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்த வளாகம் அமெரிக்காவிற்கு வெளியே அமைந்துள்ள போயிங் நிறுவனத்தின் மிகப்பெரிய வளாகமாகும் என்று தெரிவித்தார். அதன் அளவும் செயல்பாடும் இந்தியாவை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், உலகின் விமானப் போக்குவரத்து சந்தையையும் வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்.
தொழில்நுட்பம், ஆராய்ச்சி. கண்டுபிடிப்புகள், வடிவமைப்புகளை ஊக்குவிப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை இந்த மையம் நிரூபிக்கிறது என்று பிரதமர் கூறினார். இது இந்தியாவில் உற்பத்தி செய்வோம் – உலகத்துக்காக உற்பத்தி செய்வோம் (‘மேக் இன் இந்தியா-மேக் ஃபார் தி வேர்ல்ட்’) என்ற நமது தீர்மானத்தை வலுப்படுத்துகிறது என்று அவர் தெரிவித்தார். இந்த வளாகம் இந்தியாவின் திறமை மீதான உலகின் நம்பிக்கையை வலுப்படுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டார். வருங்காலத்தில் இந்த தொழிற்சாலையில் எதிர்கால விமானங்களை இந்தியா வடிவமைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த ஆண்டு கர்நாடகாவில் ஆசியாவின் மிகப்பெரிய ஹெலிகாப்டர் உற்பத்தித் தொழிற்சாலையைத் திறந்து வைத்ததை நினைவு கூர்ந்த பிரதமர், போயிங்கின் புதிய தொழிற்சாலை, கர்நாடகா ஒரு புதிய விமானப் போக்குவரத்து மையமாக வளர்ந்து வருவதன் தெளிவான அறிகுறியாக அமைந்துள்ளது என்று கூறினார். விமானப் போக்குவரத்துத் துறையில் புதிய திறன்களை வளர்த்துக் கொள்ள இந்திய இளைஞர்கள் தற்போது பல்வேறு வாய்ப்புகளைப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு துறையிலும் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளைக் குறிப்பிட்ட பிரதமர், ஜி20 தலைமைப் பொறுப்பின் போது பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை நோக்கி இந்தியா மேற்கொண்ட முயற்சிகளை நினைவு கூர்ந்தார். விண்வெளித் துறையில் பெண்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்க அரசு உறுதிபூண்டுள்ளது என்று அவர் கூறினார். போர் விமானத் துறையாக இருந்தாலும், சிவில் விமானப் போக்குவரத்தாக இருந்தாலும், பெண் விமானிகளின் எண்ணிக்கையில் இந்தியா உலகிலேயே முன்னணியில் உள்ளது என்று பிரதமர் பெருமிதம் தெரிவித்தார்.
இந்தியாவின் விமானிகளில் 15 சதவீதம் பேர் பெண்கள் என்றும், இது உலக சராசரியை விட 3 மடங்கு அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டார். போயிங் சுகன்யா திட்டம் பற்றிப் பேசிய பிரதமர், விமானப் போக்குவரத்துத் துறையில் பெண்களின் பங்களிப்புக்கு இது ஊக்கமளிக்கும் என்றும், தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் ஏழைகள் விமானி ஆக வேண்டும் என்ற கனவை நனவாக்க உதவும் என்றும் கூறினார். இத்திட்டத்தின் கீழ், பைலட் (விமானி) பணியில் இணைய அரசுப் பள்ளிகளில் தொழில் பயிற்சி மற்றும் மேம்பாட்டு வசதிகள் வழங்கப்படும் என்று பிரதமர் தெரிவித்தார்.
இந்தியாவின் செயல்திறனைத் தடுக்கும் வகையில் மோசமான போக்குவரத்து கட்டமைப்புகள் முன்பு இருந்ததாக அவர் கூறினார். முந்தைய குறைபாடுகளை நிவர்த்தி செய்ய, போக்குவரத்து உள்கட்டமைப்பில் முதலீடு செய்வதில் அரசு அதிக கவனம் செலுத்தியது குறித்தும் பிரதமர் திரு நரேந்திர மோடி பேசினார். அரசின் நடவடிக்கைகளால் நல்ல போக்குவரத்து இணைப்பு உள்ள சந்தைகளில் ஒன்றாக இந்தியா மாறி வருகிறது என்று அவர் கூறினார். தற்போது இந்தியாவில் சுமார் 150 விமான நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன என்றும், இது 2014-ம் ஆண்டில் 70 ஆக மட்டுமே இருந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். விமான நிலையங்களின் செயல்திறன் கணிசமாக மேம்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். அதிகரித்துள்ள விமான சரக்குப் போக்குவரத்துத் திறன், பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் அதிகரித்துள்ள விமான நிலைய திறன் காரணமாக விமான சரக்கு போக்குவரத்து துறை அதிவேக வளர்ச்சியை அடைந்துள்ளது என்று பிரதமர் எடுத்துரைத்தார். இது இந்தியாவின் தொலைதூர பகுதிகளிலிருந்து சர்வதேச சந்தைகளுக்கு பொருட்களை கொண்டு செல்வதை எளிதாக்கியுள்ளது என்று அவர் கூறினார். வேகமாக வளர்ந்து வரும் விமானப் போக்குவரத்துத் துறை இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு உத்வேகம் அளிக்கிறது என்று பிரதமர் மோடி மேலும் கூறினார்.
இந்தியாவில் விமான உற்பத்திச் சூழல் அமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். இந்தியாவில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் வலுவான கட்டமைப்பு, பெரிய திறன் கட்டமைப்பைக் கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். இந்தியாவில் நிலையான அரசு இருப்பதையும் அவர் எடுத்துரைத்தார். இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தை ஊக்குவிப்பதற்கான கொள்கை அணுகுமுறை ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் பயன் தரும் என்று பிரதமர் கூறினார். போயிங் நிறுவனத்தின் விமானத்தை இந்தியாவில் தயாரிப்பதற்காக இந்தியா நீண்ட காலம் காத்திருக்கத் தேவையில்லை என்று நம்பிக்கை தெரிவித்தார்.