“கவசம் போல..” ரயிலுக்கு அடியில் திக் திக்.. தன் உயிரை துச்சமென நினைத்து மகள்களை காப்பாற்றிய தாய்!
பீகார் மாநிலத்தில் தனது குழந்தைகளைக் காப்பாற்றத் துணிச்சலாகப் பெண் ஒருவர் செய்த காரியம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அந்த பெண்ணை பலரும் பாராட்டி வருகின்றனர்.
எப்போதும் தாய்க்குத் தனது குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதிலேயே அதிக கவனம் இருக்கும். மனிதர்கள் என்று சிங்கம், புலி, நாய், குரங்கு என அனைத்து விலங்குகளிலும் இந்த தாய்மை உணர்வு அதிகமாக இருக்கும்.
விலங்குகள் தங்கள் குட்டிகளைக் காப்பாற்ற எந்தவொரு எல்லைக்கும் செல்லும். மனிதர்களுக்கும் இதேதான் தனியாகச் சொல்லத் தேவையில்லை. தாய்மார்கள் தங்கள் குழந்தையைக் காக்க எந்த எல்லைக்கும் செல்வார்கள். இதற்கு நாம் பல உதாரணங்களைச் சொல்ல முடியும்.
பீகார் சம்பவம்
அப்படியொரு சம்பவம் தான் இப்போது பீகார் மாநிலத்தில் நடந்துள்ளது. பீகாரின் பார்ஹ் ரயில் நிலையத்தில் நேற்று சனிக்கிழமை தண்டவாளத்தில் பெண் ஒருவர் சிக்கிக் கொள்ள அவருக்கு மேல் ரயில் மின்னல் வேகத்தில் சென்றது. இருப்பினும், உயிரைப் பணயம் வைத்த அந்த பெண் தனது இரண்டு குழந்தைகளைக் காப்பாற்றியுள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
அதில் அந்தப் பெண் தனது இரண்டு குழந்தைகளைக் கவசம் போல காப்பாற்றியது தெளிவாகத் தெரிகிறது. அந்த பெண் ரயில் தண்டவாளத்தில் படுத்தபடியே தனது குடும்பத்தினரைக் காப்பாற்றி இருக்கிறார். அந்தப் பெண்ணும் அவரது குழந்தைகளும் பெகுசராய் என்ற பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் விக்ரம்ஷிலா எக்ஸ்பிரஸில் குடும்பத்துடன் டெல்லிக்குச் சென்று கொண்டிருந்தனர்.
கூட்டம் அதிகம்
சனிக்கிழமை பர்ஹில் ரயிலில் ஏறும் போது, நடைமேடையில் கூட்டம் நிரம்பி வழிந்துள்ளது. இதனால் நிலைதடுமாறிய அந்த பெண் தனது குழந்தைகளுடன் தண்டவாளத்தில் விழுந்தார்.
கவசம் போல
இதை அங்கிருப்பவர்கள் கவனித்துக் காப்பதற்குள் விமானம் நகரத் தொடங்கிவிட்டது. விமானத்தை நிறுத்த முடியாத நிலையில், அங்கிருந்தவர்கள் பதறிப்போனார்கள். இருப்பினும், தண்டவாளத்தில் இருந்த அந்த பெண் துளியும் பதற்றம் இல்லாமல், அப்படியே நிலத்துடன் ஒட்டி படித்துள்ளார். தனது இரு குழந்தைகள் தெரியாமல் கூட எழுந்துவிடக் கூடாது என்பதால் அவர்களைக் கவசம் போல அரவணைத்துப் படுத்துள்ளார்.
ரயில் அங்கிருந்த சென்றவுடன் அந்த பெண்ணையும் குழந்தைகளையும் உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காப்பாற்றினார்கள். அங்கிருந்து சிறு கற்கள் தாக்கியதில் அவருக்கு லேசாகக் காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து அவர் உடனடியாக அருகே உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.