இன்று ராமேஸ்வரம் வருகிறார் பிரதமர் மோடி..!
பிரதமர் மோடி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக இன்று மாலை ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் அருகே அமிர்தா பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்கும் தளத்தில் இறங்குகிறார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் ராமேஸ்வரம் ராமகிருஷ்ணா மடத்திற்கு செல்கிறார்.
அங்கு சிறிது ஓய்வுக்கு பின்பு இன்று மாலை ராமேஸ்வரம் காசிக்கு நிகராக கருதப்படும் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடுகிறார். அதன் பின்னர் ராமநாதசாமி திருக்கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தத்தில் நீராடுகிறார். தொடர்ந்து ராமநாதசுவாமி ,பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடைபெரும் சிறப்பு வழிபாடுகளில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்ய உள்ளார்.
இதனையடுத்து மீண்டும் ராமகிருஷ்ண மடத்தில் இரவு தங்கி ஓய்வு எடுக்கிறார்.தொடர்ந்து நாளை காலை 6 மணிக்கு மேல் சிறப்பு பூஜை செய்வதற்காக தனுஷ்கோடிக்கு செல்கிறார். அங்கு சிறப்பு பூஜை மற்றும் தனுஷ்கோடி பகுதியில் அமைந்துள்ள கோதண்டராமர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து மீண்டும் மாலையில் ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு செல்கிறார்.
பிரதமர் வருகையை முன்னிட்டு அவர் ஹெலிகாப்டரில் இறங்கும் இடத்திலிருந்து ராமகிருஷ்ணா மடம், திருக்கோவில், மற்றும் தனுஷ்கோடி வரை பாதுகாப்பு ஒத்திகை நேற்று நடைபெற்றது. இந்த ஒத்திகையில் 20-க்கும் மேற்பட்ட மத்திய பாதுகாப்பு வாகனங்கள் மற்று தமிழக போலீசார் வாகனங்கள் மற்றும் சிறப்பு அதிரடிப்படை வாகனங்கள் ஈடுபட்டன.
பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருவதையடுத்து பாம்பன் தீவு பகுதிகள் முழுவதும் போலீசார் வளையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கடலோர பகுதிகள் மற்றும் சாலைப் பகுதிகளில், திருக்கோவிலை சுற்றி மற்றும் அமிர்தா பள்ளி வளாகம் மற்றும் ராமகிருஷ்ணா மடவளாகம் உட்பட தனுஷ்கோடி பகுதிகளில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏறத்தாழ 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று மாலை நரேந்திர மோடி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளார். இதனால் இன்று திருக்கோவிலில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்களுக்கு தரிசனம் செய்ய பாதுகாப்பு அடிப்படையில் நிறுத்தப்பட்டுள்ளது.