வரும் 22ம் தேதி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அரைநாள் விடுமுறை ..!
மத்திய அரசு அலுவலகங்கள், மத்திய தொழில்துறை நிறுவனங்களுக்கு வரும் 22ல் அரை நாள் விடுமுறை அளித்து மத்திய அரசுப் பணியாளர்கள் நலத்துறை அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், பிராந்திய கிராமப்புற வங்கிகளுக்கும் அன்றைய தினம் அரை நாள் விடுப்பு அளித்து மத்திய நிதி அமைச்சகம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.
இதன் தொடர்ச்சியாக, புதுச்சேரியில் வரும் 22-ம் தேதி அரசு விடுமுறை விடப்படுவதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தைப் பக்தர்கள் காணொலியில் காண புதுச்சேரி, காரைக்கால் கோயில்களில் ஏற்பாடு செய்யவும் இந்து அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மத்திய அரசின் சுகாதாரத்துறையின் கீழ் இயங்கி வரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை திங்கட்கிழமை மதியம் 02.30 வரை அரைநாள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் வெளிப்புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவுக்கு வருவதைத் தவிர்க்குமாறு மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.