Ayalaan VS Captain Miller: தொடர்ந்து மாஸ் காட்டும் அயலான்… செல்ஃப் எடுக்காத கேப்டன் மில்லர்!
தமிழில் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக வெளியானதில் அயலான், கேப்டன் மில்லர் இடையே கடும் போட்டி காணப்பட்டது. இதன்மூலம் இந்தாண்டு பொங்கல் பாக்ஸ் ஆபிஸில் தனுஷ், சிவகார்த்திகேயன் இருவரில் யார் வின்னர் என்பதை பார்க்க ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில், ஒரு வாரம் கடந்த பின்னரும் அயலான் தான் முன்னணியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
அயலான் VS கேப்டன் மில்லர்: தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் இந்தாண்டு பொங்கலை முன்னிட்டு ஜன.12ம் தேதி ரிலீஸானது. அதேபோல் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படமும் கடந்த வாரம் 12ம் தேதி வெளியானது. இதுதவிர அருண் விஜய்யின் மிஸன், விஜய் சேதுபதி இந்தியில் நடித்த மெர்ரி கிறிஸ்துமஸ், தெலுங்கில் குண்டூர் காரம், ஹனுமான் ஆகிய படங்களும் வெளியாகின.
ஆனாலும் கோலிவுட் ரசிகர்களிடம் தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான் படங்கள் மீது தான் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. அதன்படி, இந்த இரண்டு படங்களுக்கும் முதல் நாளில் இருந்தே நல்ல ஓபனிங் கிடைத்தது. ஆனால், கேப்டன் மில்லருக்கு கிடைத்த சில நெகட்டிவான விமர்சனங்களால், இரண்டாவது நாளில் இருந்தே இப்படத்தின் வசூல் குறைய தொடங்கியது.
அதேநேரம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் திரைப்படம் ஃபேமிலி ஆடியன்ஸிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. கதை, திரைக்கதையை கடந்து மேக்கிங், கிராபிக்ஸ் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்தது. அதேபோல், ரத்தம் தெறிக்க தெறிக்க வன்முறை காட்சிகள் இல்லாமல் உருவாகிய அயலான், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கும் படமாக கொண்டாடப்பட்டது.
இதனால், பாக்ஸ் ஆபிஸிலும் கேப்டன் மில்லரை விட அயலான் தான் அதிகம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அயலான் திரைப்படம் 4 நாட்கள் முடிவில் 50 கோடி ரூபாய் வசூலித்ததாக படக்குழு அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக இப்போது வரை 8 நாட்களில் 63 முதல் 65 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது அயலான். ஆனால், கேப்டன் மில்லர் படத்தின் அபிஸியல் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் ரிப்போர்ட் இதுவரை வெளியாகவில்லை.
ஆனால், இந்தப் படம் 40 முதல் 45 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று முதல் அயலான் படத்துக்கு அதிகமான ஸ்க்ரீன்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல் கேப்டன் மில்லரை விட அயலானுக்கு தான் ரசிகர்கள் அதிகம் விரும்பும் ப்ரைம் டைம் நேரம் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் இந்தாண்டு பொங்கல் வின்னர் சிவகார்த்திகேயனின் அயலான் தான் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.