பிப்ரவரி 1ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் – சலுகையை எதிர்பார்க்கும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி துறை!

நாடாளுமன்றத் தேர்தல் வெகுவிரைவில் நடைபெற இருப்பதால், அடுத்த தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் முழுமையான பட்ஜெட்டாக அமையாது. அந்த வகையில் பிப்ரவரி 1ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த பட்ஜெட்டில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி சார்ந்து வரிச் சலுகை, மானியம் மற்றும் இதர ஊக்கத்தொகை போன்ற அறிவிப்புகள் வெளியாக வேண்டும் என்று தொழில்துறை நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி சார்ந்த முதலீடுகளை ஈர்க்க அது உதவியாக அமையும் என்று தொழில்துறை அமைப்புகள் தெரிவிக்கின்றன.

கடந்த சில ஆண்டுகளாகவே எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை பெருக்கவும், மக்களிடையே அதன் பயன்பாட்டை அதிகரிக்கவும் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில், அடுத்து வரக் கூடிய இடைக்கால பட்ஜெட்டிலும் அதுபோன்ற சலுகைகள் தொடர வேண்டும் என்ற எதிர்பார்ப்பை தொழில் துறையினர் வெளிப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து நியூரான் எனர்ஜி என்ற நிறுவனத்தின் இணை நிறுவனர் பிரதிக் காம்தார் கூறுகையில், “ஜிஎஸ்டி விதிமுறைகள் தொடர்பாக நல்லதொரு மாற்றம் ஏற்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். குறிப்பாக எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் அது சார்ந்த பொருட்களுக்கான வரியை குறைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

இத்தகைய நடவடிக்கைகளை எடுப்பதால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை நியாயமானதாக இருக்கும் என்பதோடு மட்டுமல்லாமல், எலெக்ட்ரிக் வாகனப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்று பொதுமக்களை ஊக்குவிக்கும் விதமாகவும் அது அமையும். நீடித்த நிலையான மற்றும் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு அல்லாத பயணச் சூழலை உருவாக்க வேண்டும் என்ற நாட்டின் இலக்கை அடைய அது உதவியாக இருக்கும்’’ என்று தெரிவித்தார். எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், FAME என்ற கொள்கையை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. ஏற்கனவே FAME-1 கொள்கை செயல்படுத்தப்பட்ட நிலையில், தற்போது FAME-2 கொள்கை நடைமுறையில் உள்ளது. இந்தக் கொள்கையை தொடர வேண்டும் என்று பிரதிக் காம்தார் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “FAME-3 கொள்கையில் என்னென்ன இடம்பெறும் என்று நாங்கள் ஆவலாக காத்திருக்கிறோம். உற்பத்தியாளர்களுக்கு தெளிவான பாதையை ஏற்படுத்திக் கொடுப்பதாகவும், உத்திசார்ந்த திட்டமிடலை மேற்கொள்ள வழிவகை செய்வதாகவும் அது அமைய வேண்டும். இந்தியாவின் மாபெரும் நகரங்களில் மாசுபாடு அதிகரித்து வரும் நிலையில், எலெக்ட்ரிக் வாகனங்களை துரிதமாக தயாரிப்பது மற்றும் அதன் பயன்பாட்டை ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கலால் வரி

இதற்கு முந்தைய பட்ஜெட்டுகளின்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் மீதான கலால் வரி குறைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து உதிரி பாகங்களை இறக்குமதி செய்து உள்ளூர் தயாரிப்புகள் அதிகரித்தன. இந்த நிலையில் அனைத்து எலெக்ட்ரிக் வாகன உதிரி பாகங்களுக்கும் 5 சதவீதம் சீரான ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டும் என்றும், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்றும் தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *