டோட்டலாக மாறிய வேளச்சேரி.. கிரவுண்ட் ஃப்ளோர் பேரை கேட்டாலே அதிரும் வாடகைதாரர்கள்.. ஓனர்கள் கவலை
சென்னை வேளச்சேரியில் தரைதளத்தின் பெயரை கேட்டாலே வாடகைதாரர்கள் அரண்டு போவதாக வீட்டு உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.
சொந்த வீடாக இருந்தாலும் சரி வாடகை வீடாக இருந்தாலும் சரி மக்கள் பெரிதும் விரும்புவது தரைதளமான கிரவுண்ட் ஃப்ளோரைத்தான். தற்போது கிரவுண்ட் ப்ளோர்களில் கார் பார்க்கிங் அமைத்துவிடுகிறார்கள். இந்த செட்டப்புக்கு முன்னர் தரைதளத்தில் வீடு கட்டப்பட்டுள்ள இடங்களில் எல்லாம் இப்படித்தான்.
லிப்ட் இருந்தாலும் சரி தரைதளம் தான் வேண்டும் என்பார்கள். இதற்கு காரணம் எளிதாக புழங்கலாம். மூச்சு வாங்க மாடி ஏற வேண்டிய அவசியம் இல்லை, கரென்ட் இல்லாத நேரங்களில் லிப்ட் வேலை செய்தாலும் கவலையில்லை, செய்யாவிட்டாலும் கவலையில்லை.
அது போல் வீட்டில் மோட்டார் பழுதடைந்துவிட்டால் வெளியே உள்ள பொதுக் குழாயில் தண்ணீர் எடுத்து வர வேண்டும் என்றாலும் அது மற்ற தளங்களில் இருந்தால் பெரும் சிரமமாக இருக்கும் என வாடகைதாரர்கள் கருதுகிறார்கள். வீட்டில் வயதானவர்கள் இருந்தாலும் அவர்களும் தரைதளத்தைத்தான் விரும்புவார்கள்.
மேலும் மற்ற தளங்களை விட தரைதளத்தில் வாடகை அதிகம் ஆகும். இருந்தாலும் பரவாயில்லை என கருதி பலர் தரைதளத்தில் குடியிருக்கிறார்கள். இதெல்லாம் 2015 வெள்ளம் வரும் வரைதான். சென்னையில் பெருவெள்ளத்தின் போது முடிச்சூர், தாம்பரம், பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகள் எல்லாம் மழை நீரில் மூழ்கியது.
இதில் முதல் மாடி வரை தண்ணீரில் மூழ்கியது. இதனால் அங்கிருந்த குடியிருப்புவாசிகளை கடுமையான சிரமங்களை சந்தித்தனர். பலரது வீட்டில் இருந்த சோபா, நாற்காலி, டைனிங் டேபிள், கட்டில், மெத்தை, டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், விண்டோ ஏசி உள்ளிட்டவை மழை நீரில் மூழ்கி பெரும் பொருள் இழப்பை சந்திக்க வைத்தது.
அப்போது முதலே சென்னையில் கிரவுண்ட் ஃபளோரில் குடியிருப்பதை பலர் விரும்பவில்லை. இதனால் மேற்கண்ட வெள்ளம் பாதித்த இடங்களில் வாடகை குறைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து 2016ஆம் ஆண்டு பெரும் அச்சத்துடன் இருந்த மக்களுக்கு மழை தீமையை செய்யவில்லை.
இதனால் ஒரு சிலர் தரை தளத்திற்கு குடியிருப்பது, தரைதள வீட்டை வாங்குவது போன்ற செயல்களை செய்தனர். இந்த நிலையில் தற்போது மிக்ஜாம் புயல் பாதிப்பால் வேளச்சேரி, பள்ளிக்கரணை, முடிச்சூர், தாம்பரம், மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 15 அடி அளவுக்கு வெள்ள நீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.
இந்த நிலையில் வெள்ள நீர் வடிந்தாலும் பொருளாதார இழப்பு இழப்புதான். வாடகை வீட்டில் இருப்போர் இனி இப்படி ஒரு சூழலை வாழ்விலேயே சந்திக்கக் கூடாது என்ற வைராக்கியத்துடன் காலி செய்து வருகிறார்கள். நோட்டீஸ் பீரியட்டை கூட கருத்தில் கொள்ளாமல் பலர் காலி செய்வதாக கூறுகிறார்கள். தரைதளம், முதல் தளத்தில் இருப்போர் உடனடியாக வீட்டை காலி செய்கிறார்களாம்.
இதுகுறித்து வீட்டு உரிமையாளர்கள் கூறுகையில் என் வேளச்சேரி வீட்டில் கீழே குடியிருந்தவர்கள் காலி செய்துவிட்டார்கள். இதனால் வாடகைக்கு வீடு இருப்பதாக விளம்பரம் செய்தேன். அப்போது அதில் கொடுக்கப்பட்ட எண்ணுக்கு ஒருவர் போன் செய்தார். வீடு எங்கே என கேட்டார் வேளச்சேரி என்றதற்கு சிரித்தார்.
அது போல் எந்த தளம் என கேட்டார். நான் தரைதளம் என்றேன். உடனடியாக எதுவுமே சொல்லாமல் இணைப்பை கட் செய்துவிட்டார். வாடகைக்கு குடியில்லாததால் நாங்கள் எப்படி மாத தவணைத் தொகை செலுத்துவது என தெரியவில்லை. அரசாங்கம் பார்த்து எங்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும். வேளச்சேரியில் தண்ணீர் தேங்குவதற்கு காரணம் மழை நீர் மட்டும் அல்ல. பள்ளிக்கரணை, கிண்டி உள்ளிட்ட பகுதியில் இருந்தும் நீர் எங்கள் பகுதிக்கு வருகிறது.
வீராங்கல் ஓடையிலிருந்து நீர் கிண்டி வழியாக எங்கள் பகுதிக்கு வந்துவிடுகின்றன. இவை வேளச்சேரியிலிருந்து சதுப்பு நிலத்திற்கு செல்ல முற்படுகிறது. ஆனால் சதுப்பு நிலத்தில் அந்தளவுக்கு தண்ணீரை உறிஞ்சாத தன்மை உள்ளது. இதனால்தான் வெள்ளம் வருகிறது. நீலாங்கரையிலிருந்து பக்கிங்ஹாம் கால்வாய்க்கு செல்லும் படி வடிகால் அமைப்பதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். அதுவரை வாடகைக்கு ஆள் கிடைக்காமல் நாங்கள் என செய்வது என தெரியவில்லை என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.