அந்த சிஎஸ்கே வீரர் பந்தயத்திலேயே இல்லை.. கதை எப்போதோ முடிந்துவிட்டது.. ஓபனாக சொன்ன முன்னாள் வீரர்!
சிஎஸ்கே அணியின் இளம் நட்சத்திர வீரரான ருதுராஜ் கெய்க்வாட் டி20 உலகக்கோப்பை தொடருக்கான பந்தயத்தில் இருந்து எப்போதோ ஓரங்கட்டப்பட்டுவிட்டார் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
கடந்த டி20 உலகக்கோப்பை தொடர் முடிவடைந்த பின் ரோகித் சர்மா, கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் பக்கம் திருப்பினர். இதனால் டி20 கிரிக்கெட்டில் சுப்மன் கில், இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு சீராக வாய்ப்பு கிடைத்து வந்தது.
இதனிடையே ஆசிய போட்டிகளுக்கான இந்திய அணியை ருதுராஜ் கெய்க்வாட் வழிநடத்தி தங்கப்பதக்கத்தை வென்று திரும்பினார். இதன்பின் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் சதம் விளாசிய ருதுராஜ் கெய்க்வாட், அந்த தொடரில் மட்டும் 222 ரன்களை விளாசி அசத்தினார். இதன்பின் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 மற்றும் டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டார் ருதுராஜ்.
ஆனால் தென்னாப்பிரிக்கா மண்ணில் சென்று இறங்கியதும் ஒரு பக்கம் காய்ச்சல், இன்னொரு பக்கம் விரலில் காயம் என்று ருதுராஜ் கெய்க்வாட் சிக்கி கொண்டார். இதன் காரணமாக ஆஃப்கானிஸ்தான் டி20 தொடரில் இருந்து விலக வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட, ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் மீண்டும் சீனுக்குள் வந்தனர்.
இதனால் இந்திய அணியின் டாப் ஆர்டர் ரோகித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் என்று நிரம்பியுள்ளது. இந்திய அணியின் எதிர்கால சூப்பர் ஸ்டார், பிரின்ஸ் என்று கொண்டாடப்பட்ட சுப்மன் கில்லுக்கும் டி20 அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை என்றே பார்க்கப்படுகிறது. இதனிடையே ருதுராஜ் கெய்க்வாட் என்சிஏ-வுக்கும் இதுவரை செல்லவில்லை என்று சில தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசுகையில், தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது ருதுராஜ் கெய்க்வாட் காயமடைந்ததால், அனைத்து போட்டிகளிலும் விளையாட முடியவில்லை. அதேபோல் அவரின் ஆட்டம் அந்த அளவிற்கு சிறப்பாக இல்லை என்றே சொல்லலாம். அதனால் அவரின் திறமை முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என்றும் சொல்ல முடியாது. டி20 உலகக்கோப்பை பொறுத்தவரை, வெளிப்படையாக பேச வேண்டுமென்றால், அவர் பந்தயத்தில் இல்லை என்பதே உண்மை. அது டி20 போட்டியாக இருந்தாலும், டெஸ்ட் போட்டியாக இருந்தாலும் அதுதான் நிலைமை என்று தெரிவித்துள்ளார்.