குளிர்காலத்தில் கை, கால் விரல்கள் வீங்குகிறதா..? இதற்கு என்ன காரணம் தெரியுமா..?

குளிர்காலம் வந்தாலே பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் வரிசைகட்டி வந்துவிடும். இந்த சமயத்தில் சூடான சாக்லேட் காஃபி குடிக்கும் போது நமக்கு கதகதப்பு கிடைத்தாலும் கடுமையான குளிர் காரணமாக நமது கை மற்றும் கால் விரல்களில் வீக்கம் ஏற்படுகின்றன. குளிர்காலத்தில் சுவாசப் பிரச்சனைகள், மூட்டு வலி, தசை வலி, பனிக்கடுப்பு போன்ற பொதுவான உடல்நலப் பிரச்சனைகளால் பாதிக்கப்படுவோம். ஆனால் கை மற்றும் கால் விரல்களில் வரும் வீக்கம் சில்பிளைன்ஸ் என்று அழைக்கப்படும் குளிர் கொப்புளத்தை உண்டாக்குகின்றன.

குளிர்காலத்தில் நிலவும் கடுமையான குளிர் காரணமாக சில்பிளைன்ஸ் (குளிர்கால கொப்புளம்) உண்டாகிறது. இது நமது ரத்த நாளங்களை பாதிக்கிறது. இதன் காரணமாக சருமத்தில், முக்கியமாக கை, கால் விரல்கள், காதுகள், மூக்கில் சிறியதாக சிவப்பு அல்லது நீல நிறத்தில் அரிப்பு ஏற்படுகிறது.

குளிர்கால கொப்புளங்களின் அறிகுறிகள்

வீக்கம்: கொப்புளம் ஏற்பட்ட இடத்தைச் சுற்றி வீக்கம் உருவாகிறது. இதனால் பாதிக்கப்பட்ட இடத்தை தொடும்போது மென்மையாக இருக்கும்.

சருமம் நிறம் மாறுதல்: பாதிக்கப்பட்ட பகுதிகள் சிவப்பு அல்லது நீல நிறத்தில் மாறும். சருமத்தில் ஏற்படும் வீக்கம் காரணமாகவே இப்படி தோலின் நிறம் மாறுகிறது.

அரிப்பு மற்றும் எரிச்சல்: குளிர்கால கொப்புளம் கடுமையான அரிப்பு மற்றும் எரிச்சலைத் தரும். இதனால் தினசரி பணிகளில் ஈடுபடுவது சிரமமாக இருக்கும்.

கொப்புளம் அல்லது புண்: தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது தொடர்ச்சியாக குளிர் நேரத்தில் வெளியே சென்று வந்தால் கொப்புளம் அல்லது புண் உருவாகும். இது வலியை ஏற்படுத்துவதோடு தொற்றை அதிகரிக்கும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

கதகதப்பு: குளிர்காலத்தில் நிறைய உடைகள் அணிந்து உடலை சூடாக வைத்திருங்கள். கைகள், கால்கள், காது, மூக்கு ஆகியவற்றுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சாக்ஸ், கிளவுஸ், தொப்பி, ஸ்வெட்டர் அணிந்துகொண்டு வெளியே செல்லுங்கள்.

திடீர் வெப்பநிலை மாற்றத்தை தவிர்க்கவும்: கொஞ்சம் கொஞ்சமாக உடலின் பகுதிகளை கதகதப்பாக்குங்கள். அப்போதுதான் ரத்த நாளங்களில் சுருக்கம் ஏற்படுவது தடுக்கப்படுவதோடு குளிர் கொப்புளம் வருவதும் தடுக்கப்படுகிறது.

கதகதப்பான அறை: நீங்கள் வசிக்கும் வீடு, பணியிடம் போன்றவை கதகதப்பாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். குளிர்காலத்தில் அறைக்குள் சரியான வெப்பநிலை நிலவுவதற்கு வசதியாக ஹீட்டரை பயன்படுத்தலாம்.

குளிர் மற்றும் ஈரம் உடலில் படக்கூடாது: ஈரமான மற்றும் குளிரான இடங்களில் அதிக நேரம் செலவழிக்காதீர்கள். குளிரான பகுதியில் இருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் உடலில் ஈரம் படுவதை தவிர்க்கவும்; நேரம் கிடைக்கும் போது வெப்பமாக பகுதியில் ஓய்வெடுங்கள்.

கால்களை பராமரியுங்கள்: உங்கள் கால்களை ஈரமின்றி வைத்திருங்கள். வெளியே செல்லும் போது தண்ணீர் புகாத காலனிகள் அல்லது ஷூக்களை அணியுங்கள். கால்கள் வறண்டு போகாமல் தடுக்க அவ்வப்போது மாய்ஸரைசர் பயன்படுத்துங்கள். இது குளிர் காலத்தில் கொப்புளம் வருவதை தடுக்கும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *