அயோத்திக்கும் ஸ்ரீரங்கத்துக்கும் இப்படி ஒரு தொடர்பு இருக்கா? தெரிஞ்சா அசந்திடுவீங்க!
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி மாதம் 22ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், 108 திவ்ய தேசத்தில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கும், அயோத்தி ராமருக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு தற்போது வெளியாகியுள்ளது.
ஸ்ரீரங்கம் கோயில் சிலை பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலிருந்து வெளிப்பட்டு தோன்றியதால் இதை சுயம்பு என்று கூறுவர். இத்தகைய சிறப்புமிக்க மூலவருக்கு, நித்திய பூசை செய்ய பிரம்மா சூரியனை நியமித்தார்.
பிறகு சூரிய குலத்தில், அதாவது ரகு வம்சத்தில் பிறந்த அரசன் இட்சுவாகு இந்த சிலையை தனது தலைநகரமாகிய அயோத்திக்கு வழிபடக் கொண்டு சென்றான். தசரதன், ராமர் உள்ளிட்டோர் இச்சிலையை வழிபட்ட நிலையில், இலங்கையிலிருந்து தனது பட்டாபிஷேகத்துக்கு வந்த ராவணனின் தம்பி விபீஷணனுக்கு ராமர் பரிசாகக் கொடுத்தார்.
இதனை விபீஷணன் தனது தலையின் மீது சுமந்து இலங்கைக்கு எடுத்துச் செல்லும் வழியில், திருச்சி காவிரியாற்றின் கரையை அடைந்தான். அங்கு சிலையை கீழே இறக்கி வைக்க கூடாது என்று எண்ணினான். அப்போது அங்கு ஒரு சிறுவன் ஆட்டு மந்தையை மேய்த்து கொண்டிருந்தான்.
அச்சிறுவனிடம் அச்சிலையை கொடுத்து விட்டு, கீழே வைக்க கூடாது என்று சொல்லி விட்டு காவிரியில் நீராடினான் விபீஷணன் . நீராடி திரும்பும் முன்னரே சிறுவன் சிலையை கீழே வைத்து விட்டான். விபீஷணன் அந்த சிலையை எடுக்க முயன்றும் முடியவில்லை. சிறுவனாக வந்த விநாயக பெருமான், ‘சிலையை கீழே வைத்தது நான் தான்’ என்று கூறி மலைக்கோட்டை உச்சியில் சென்று அமர்ந்தார்.
‘அயோத்தியில் இருந்த ரங்கநாதர், ஸ்ரீரங்கத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்க வேண்டும்’ என்று தவம் இயற்றிய தர்மவர்ம சோழன் விருப்பப்படியே காவிரிக்கரையில் தங்கியிருக்க ரங்கநாதர் விருப்பம் தெரிவித்தார். அதேநேரத்தில் விபீஷணனுக்காக, “தென்திசை இலங்கை நோக்கி பள்ளிக் கொண்டருள்வதாக” ரங்கநாதர் உறுதியளித்தார்.
பின்னர் தர்மவர்ம சோழன் அச்சிலையைச் சுற்றி கோயில் எழுப்பி வழிபாடு செய்தார். இதன் காரணமாக, கோயில் கருவறையை சுற்றியுள்ள முதல் சுற்று தர்மவர்மன் சுற்று என்று தற்போது வரை அழைக்கப்படுகிறது. பின்னர், காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கோயில் முழுவதும் மணலால் மூடப்பட்டது.
ஒரு கிளியின் உதவியுடன் கோயிலை கண்டுபிடித்ததால், கிளிச் சோழன் என்றும், கிள்ளிவளவன் என்றும் அம்மன்னன் அழைக்கப்படுகிறார், அவர்தான் ஸ்ரீரங்கம் கோயிலை புரனமைத்து, ரங்கநாதருக்கு பிரம்மாண்டமான பெரிய கோயிலை கட்டினார். தற்போதைய ஸ்ரீரங்கம் கோயில் தங்க விமானம், ராமர் கையினால் பெற்று, விபீஷணன் அயோத்தியில் இருந்து கொண்டு வந்ததுதான்.
ராமர் குலதெய்வம்
இதுகுறித்து ஸ்ரீரங்கத்தை சேர்ந்த, கோயில் கொங்கிலாச்சான் ராமராஜ நரசிம்மசாரியார் கூறியபோது, “ஸ்ரீராமரின் குலதெய்வம் ரங்கநாதர். ராமர் தனது கரங்களினால் பூஜித்த பெருமாள் ஸ்ரீரங்கம் ரங்கநாதர். ராமரும், அவரது முன்னோர்கள் அஜன், திலீபன், தசரதன் என்று அவர்கள் தொடர்ந்து வழிபட்ட தெய்வம் ரங்கநாதர். ராமருடைய குலத்தின் சொத்தே ரங்கநாதர் தான். விபீஷணன் ராட்ஷதன் என்பதால் இவ்வளவு பெரிய விமானத்தை ஸ்ரீரங்கம் வரை சுமந்து வந்திருக்கிறார். நமக்கு ரங்கநாதரை அருள்பாலிக்க செய்திருக்கிறார்” என்கிறார்.