Glaucoma: கண் நீர் அழுத்த நோய் – கவனிக்காமல் விட்டால் பார்வையே பாதிக்கப்படும்!
பார்வைக் குறைபாடு, மாறு கண், கேட்ராக்ட், சர்க்கரை நோயாளிகளைத் தாக்கும் டயபடிக் ரெட்டினோபதி எனப்படும் விழித்திரை பாதிப்பு…
என்று கண்களில் உண்டாகும் பிரச்னைகள் ஏராளம். இவற்றைப் போலவே நாம் கவனம் கொடுக்க வேண்டிய முக்கிய கண் பிரச்னை ஒன்று இருக்கிறது. அது… கண் நீர் அழுத்த நோய். இதை ஆங்கிலத்தில் கிளாகோமா (Glaucoma) என்று கூறுவோம்.
கிளாகோமாவின் அறிகுறிகளைப் புறக்கணிக்கும்போது அதன் பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி, ஒரு கட்டத்தில் பார்வையே பறிபோகும் வாய்ப்புகள் இதில் இருப்பதால், இதுகுறித்து கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டியது மிகவும் அவசியமானது என்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவ நிபுணர் சௌந்தரம். பார்வையைப் பயமுறுத்தும் கிளாகோமா குறித்து அவர் பகிர்ந்துகொள்ளும் முக்கியத் தகவல்கள் இங்கே…
`கிளாகோமா’ அடிப்படை புரிதல் மிக அவசியம்!
எப்படி நம் உடலில் ரத்த அழுத்தம் உள்ளதோ, அதேபோல நமது கண்களிலும் உள்விழி அழுத்தம் (Intraocular pressure) என்பது உள்ளது. இந்த அழுத்தம் அதிகமாகும்போது அது கண்ணிலிருந்து மூளைக்குச் செல்லும் ஆப்டிக் நரம்பை (Optic nerve) பாதிக்கும். இதைத்தான் நாம் கிளாகோமா என்று சொல்கிறோம். கிளாகோமா பாதிப்புக்கு உள்ளானால், கண்ணுக்கு நேராக உள்ளவை தெரியும். ஆனால் பக்கவாட்டில் உள்ளவை கண்களுக்குத் தெரியாது. இந்த அறிகுறிகளை கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கும்போது கண் பார்வை பாதிக்கப்படத் தொடங்கி, ஒருகட்டத்தில் பார்வை முற்றிலுமாகப் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. எனவே வழக்கத்திற்கு மாறாக உங்களது பார்க்கும் திறனில் குறைபாடு தெரிந்தால் காலம் தாழ்த்தாமல் கண் மருத்துவரைச் சந்தித்திடுங்கள்.
மருந்தின் மூலம் கட்டுக்குள் வைக்கலாம்!
கிளாகோமா பிரச்னைக்கென இருக்கும் கண்களுக்கான சொட்டு மருந்தைப் பயன்படுத்துவதன் மூலமாக இந்த பாதிப்பை கட்டுக்குள் வைக்கலாம். எப்படி உயர் ரத்த அழுத்தப் பிரச்னைக்கு மருந்துகள் எடுத்து அதனைத் தொடர்ந்து கட்டுக்குள் வைத்திருக்கிறோமோ, அதேபோல இந்தக் கண் சொட்டு மருந்தை மருத்துவரின் பரிந்துரைக்கு ஏற்ப வாழ்நாள் முழுவதும் சரியாகப் போட்டுவர வேண்டும். இதன் மூலம் கண்களில் உள்ள Intraocular pressure அதிகரிக்காமல் கட்டுக்குள் வைக்கமுடியும்.