“அதற்காகவே காலம் முழுவதும் விஜயகாந்த்துக்கு நன்றி கூறுவேன்” – நடிகர் நாசர் @ நினைவேந்தல் நிகழ்வு
சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடிகர் விஜயகாந்த்திற்கு நேற்று புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட திரை பிரபலங்கள் விஜயகாந்த் குறித்த தங்களது நினைவுகளை பகிர்ந்துகொண்டு அவருக்கு புகழஞ்சலி செலுத்தினர்.
புரட்சி கலைஞர், கேப்டன் என திரையுலகினராலும், ரசிகர்களாலும் அன்புடன் அழைக்கப்பட்டவர் நடிகர் விஜயகாந்த். சினிமாவில் முப்பது வருடங்களாக வெற்றிப்பயணம் நடத்திய அவர் மக்களுக்கு சேவை செய்ய அரசியலிலும் நுழைந்து அதிலும் நன்மதிப்பை பெற்றார். ஆனால் கடந்த பல வருட காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட கேப்டன் விஜயகாந்த் கடந்த டிச-28 ஆம் தேதி இவ்வுலகை விட்டு மறைந்தார். திரையுலகில் பல நல்ல மாற்றங்களுக்கு வித்திட்ட அவர், தான் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது பிரமாண்ட நிகழ்ச்சி நடத்தி நடிகர் சங்கத்தை கடனில் இருந்து மீட்டார். அந்த மாபெரும் மனிதரின் நினைவுகளை பகிர்ந்துகொள்ளும் விதமாக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சென்னை தேனாம்பேட்டையில் காமாராஜர் அரங்கில் அவருக்கு புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது.
தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் பேசும்போது,’விஜயகாந்த் அண்ணன் எப்போதும் அவர் அணிகின்ற வெள்ளை ஆடையில் ஒரு சின்ன கருப்பு பொட்டு கூட இல்லாமல் மிக உண்மையான உன்னதமான மக்களுக்கான வாழ்வை வாழ்ந்து சென்றுள்ளார். அவரைப் பற்றி நினைக்கும் போது, மிகவும் வெற்றி பெற்ற உச்சகட்ட நட்சத்திரமாக, அதைவிட முக்கியமாக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக அவரது இரு முகங்களை நான் காண்கின்றேன்.
முதல் முறையாக அவருடைய தலைமையில் தான் வெகு நாட்கள் கழித்து சினிமா நட்சத்திரங்கள் அத்தனை பேரையும் கோழி தன் குஞ்சுகளை அடைகாப்பது போல நட்சத்திர கலைவிழாவுக்கு அள்ளிச் சென்றார். அவர் கொடுத்த ஒரு யோசனை ஊக்கம் தைரியம் தான் நம்மாலும் அதை செய்ய முடியும் என்கிற எண்ணம் ஏற்பட காரணம். அதற்கு காலம் முழுவதும் நான் அவருக்கு நன்றி கூறுவேன். இன்று தென்னிந்திய நடிகர் சங்கம் மிக சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது என்றால் அவருடைய வருகை தான் எங்களுக்கு முக்கியமான மேடை அமைத்து கொடுத்திருக்கிறது’ என்றார்.