Shoaib Malik Marriage: சானிய மிர்சாவுடன் பிரிவு, 2ஆவது இன்னிங்ஸை தொடங்கிய சோயிப் மாலிக், நடிகையுடன் திருமணம்!

சமீபகாலமாக கிரிக்கெட் பிரபலங்கள் விவாகரத்து தொடர்பான செய்திகள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் விவாகரத்து மற்றும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மற்றும் அவரது மனைவி ஹசின் ஜஹான் இடையிலான பிரிவு பற்றிய செய்திகள் தான் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் தான் தற்போது டென்னிஸ் உலகில் உச்சம் தொட்ட இந்திய வீராங்கனையான சானியா மற்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சோயிப் மாலிக் இருவரும் விவாகரத்து பெற்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சோயிப் மாலிக் 2ஆவதாக பாகிஸ்தான் நடிகையான சனா ஜாவேத்தை திருமணம் செய்து கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயிப் மாலிக்கும் கடந்த 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகளில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். இதற்கிடையில் இருவரும் விவாகரத்து கோர இருப்பதாக தகவல் வெளியானது. இதற்கு சோயிப் மாலிக் மறுப்பு தெரிவித்திருந்தார். பிறகு இருவரும் ஒரு நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்டனர். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சானியா மிர்சா குறித்த தகவல்களை சோயிப் மாலிக் நீக்கியிருந்தார். அதாவது மிகச்சிறந்த பெண்மணியான சானியா மிர்சாவின் கணவர் என்று குறிப்பிடப்பட்டிருந்ததை தனது இன்ஸ்டாவிலிருந்து நீக்கியிருந்தார்.

இது ஒரு புறம் இருக்க, கடந்த சில தினங்களுக்கு முன்பு சானியா மிர்சா தனது இன்ஸ்டா பதிவில் திருமணம் கடினமானது, விவாகரத்து கடினமானது என்று குறிப்பிட்டிருந்தார். திருமணமும், விவாகரத்தும் கடினமானது தான். இதில், உங்களுக்கான கடினமானதை நீங்களே தேர்வு செய்யுங்கள். உடல் பருமானக இருப்பதும், ஃபிட்டாக இருப்பதும் கடினம் தான். கடினமானதை நீங்களே தேர்வு செய்யுங்கள். கடன் பிரச்சனை, நிதி ஒழுக்கத்தை கடைபிடிப்பதும் கடினம் தான்.

தொடர்பு கொள்வதும் கடினம், தொடர்பு இல்லாமல் இருப்பதும் கடினம் தான். இதில், கடினமானதை தேர்வு செய்யுங்கள். எப்போதும் வாழ்க்கை எளிதாக இருக்காது. அது எப்போது கடினம் தான். ஆனால், அது நமது கையில் தான் இருக்கிறது. புத்திசாலித்தனமான முடிவுகளை தேர்வு செய்யுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதன் காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தான் சோயிப் மாலிக் நடிகை சனா ஜாவேத்தை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனை சோயில் மாலிக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து நாம் ஜோடிகளாக மாறினோம் என்று பதிவிட்டுள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *