நடுவரிடம் வம்பு செய்த விவகாரம். மன்னிப்பு கோரினார் டாம் கரன்

நடுவரிடம் வம்பு செய்து 4 மேட்ச்சுகளில் விளையாடுவதற்கு தடை பெற்றுள்ள இங்கிலாந்து பவுலர் டாம் கரன், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரியுள்ளார். இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளைப் போன்று ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் லீக் எனப்படும் பிபிஎல் 20 ஓவர் போட்டிகள் நடத்தப்படுகினற்ன.

இதில் இங்கிலாந்து அணியின் பவுலர் டாம் கரன், சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணிக்கும், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கும் இடையே சில தினங்களுக்கு முன்பாக மேட்ச் நடைபெற்றது. பயிற்சியின்போது ஆட்டம் நடைபெறக் கூடிய மைதானத்தில் பவுலிங் போடுவதற்கு டாம் கரன் முற்பட்டார். விதிப்படி மேட்ச் நடைபெறும் மைதானத்தில் பந்து வீச அனுமதி கிடையாது என்பதால், அதற்கு நடுவர் அனுமதி கொடுக்கவில்லை.

நடுவரின் கட்டுப்பாட்டை மீறிய டாம் கரன், அவரை இடித்துக் கொண்டு பந்து வீசுவதைப் போன்ற செயலில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த நடுவர் இதுபற்றி வீடியோ ஆதாரத்துடன் புகார் அளிக்க, டாம் கரனுக்கு 4 போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தான் செய்த செயலுக்கு வருத்தம் தெரிவிப்பதாக டாம் கரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- நான் எப்போதும் போட்டி அலுவலர்களை மதித்து நடக்கக் கூடியவன். நடுவர்களிடம் நட்புடனும் அன்புடனும் நான் பழகி வருகிறேன். பவுலிங் பயிற்சிக்காக நான் ஆடுகளத்தில் ஓடியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

நான் நடுவரை இடித்து விட்டதாக அவர் நினைத்துள்ளார். அப்படி எதையும் நான் உள்நோக்கத்துடன் செய்யவில்லை. என்று கூறியுள்ளார். பிபிஎல் போட்டிகளை நடத்தும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்தின் தலைவர் அலிஸ்டார் டாப்சென் கூறுகையில், ‘கிரிக்கெட் ஆட்டத்தில் நடுவர்கள் மிகவும் முக்கியமானவர்கள். அவர்களை கண்டிப்பாக அனைத்து வீரர்களும் மதித்து நடக்க வேண்டும். டாம் கரனுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை குறித்து அவரது அணிக்கு தெரிவித்தோம். அவர்களும் இதனை ஏற்றுக் கொண்டுள்ளனர்’ என்று கூறியுள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *