ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வழிபட்ட பிரதமர் மோடி… கம்ப ராமாயணம் கேட்டு மகிழ்ந்தார்!
மூன்று நாட்கள் பயணமாக தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் மோடி, நேற்று கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்ததுடன், நேற்றிரவு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கினார். இன்று காலை சென்னையில் இருந்து ராணுவ விமானம் மூலம் ஆகாய மார்க்கமாக திருச்சி சென்றார் . பிரதமர் மோடியை மத்திய இணையமைச்சர் எல்.முருகன், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட 25 பேர் வரவேற்றனர்.
பின்னர் பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் அருகில் அமைக்கப்பட்ட ஹெலிபேடுக்கு சென்றார்.
பிறகு அங்கிருந்து பஞ்சகரை சாலை வழியாக ஸ்ரீரங்கம் கோவிலின் வடக்கு வாசல் வழியாக கோவிலுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு வழியில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து கோயிலின் பிரதான நுழைவு வாயிலான ரங்கா ரங்கா கோபுரத்தின் வழியாக கோயிலின் உள்ளே சென்று சாமி தரிசனம் செய்தார்.
பிரதமரின் வருகையை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பாதுகாப்பு பணியில் 3,700 போலீசார் ஈடுபட்டு இருந்தனர்.
ஸ்ரீரங்கம் “ரங்கா ரங்கா” கோபுரம் வரை குர்தா பைஜாமா உடையில் வந்த பிரதமர் மோடி, அதன் பிறகு கோபுரம் முன்பு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக அறைக்குள் சென்று, பட்டு சால்வை அணிந்து, கோயிலுக்குள் சென்றார்.
கோயிலுக்குள் சென்ற பிரதமர் மோடி அங்குள்ள கோயில் யானையான ஆண்டாளிடம் ஆசி பெற்றார். அப்போது யானை மவுத் ஆர்கன் வாசித்துக்காட்டி அசத்தியது.
உள்ளே சென்ற பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. மரியாதையை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி, பின்னர் ரங்கநாதரை வழிபட்டார்.
அதனைத் தொடர்ந்து கோயிலில் நடந்த பூஜைகளில் பங்கேற்றார். பிறகு கோயில் வளாகத்தில் சிக்கல் குருசரண், ஆன்மிக சொற்பொழிவாளர் இலங்கை ஜெயராஜ் மற்றும் குழுவினர் நடத்திய கம்பராமாயண நிகழ்ச்சியை பிரதமர் மனமுருக கேட்டு ரசித்தார்.
கோயிலுக்கு மீண்டும் வர முயற்சிப்பேன் என்றும் கோயில் ஊழியர்களிடம் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கம்பராமாயணம் கேட்டு ரசித்த பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற பிரதமர் ஹெலிபேடு வரை காரில் சென்றார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் புறப்பட்டுச்சென்றார்.
முன்னதாக பிரதமரை வழி அனுப்பி வைக்க திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார், திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, மற்றும் பாஜக திருச்சி மாவட்ட நிர்வாகிகள் வந்திருந்தனர்.