மல்டிபேக்கர் பங்கு: ஓராண்டில் 214 சதவீதம் லாபம் கொடுத்த அரசு நிறுவனம் – RVNL
மத்திய அரசு நிறுவனமான ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (ஆர்விஎன்எல்) ரயில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிறுவனம் அண்மையில் மத்திய பிரதேசத்தில் ரூ.251 கோடி மதிப்பிலான மின் பரிமாற்ற திட்ட வர்த்தக ஒப்பந்தத்தை பெற்றது.இதன் எதிரொலியாக கடந்த சில தினங்களாக இந்நிறுவன பங்கின் விலை உயர்ந்து வருகிறது.
இந்த சூழ்நிலையில், இந்நிறுவனம் புதிதாக இரண்டு நிறுவனங்களை தொடங்கியுள்ள தகவல் வெளியானதையடுத்து பங்கு விலை உயர்வு தொடர்ந்தது. கடந்த செவ்வாய்க்கிழமையன்று மாலையில், ஜாக்சன் கிரீன் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து இந்தியாவிலும் வெளிநாட்டிலும் சோலார் EPC திட்டங்களை ஆராய்வதற்கான ஒரு கூட்டு வர்த்தக நிறுவனத்தை அமைத்துள்ளதாக ஆர்விஎன்எல் நிறுவனம் தெரிவித்தது.
இந்த கூட்டு வர்த்தக நிறுவனத்தில் ஜாக்சன் கிரீன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 51 சதவீத பங்கு மூலதனத்தையும், ஆர்விஎன்எல் நிறுவனம் 49 சதவீத பங்கு மூலதனத்தையும் கொண்டு இருக்கும்.ஆர்விஎன்எல் நிறுவனம் அன்றைய தினம் பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்த மற்றொரு அறிக்கையில், நிறுவனம் தென்னாப்பிரிக்காவில் ஆர்விஎன்எல் இன்ப்ரா தென்னாப்பிரிக்கா என்ற துணை நிறுவனத்தை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.இந்த பாசிட்டிவ்வான செய்தி காரணமாக மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இந்நிறுவன பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.289.95ஐ எட்டியது. மேலும் தொடர்ந்து 9வது வர்த்தக தினமாக பங்குச் சந்தையில் இன்று ஆர்விஎன்எல் நிறுவன பங்கின் விலை உயர்ந்தது.
ஆர்விஎன்எல் நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் ஆதாயம் அளித்துள்ளது. கடந்த ஆண்டில் இந்நிறுவன பங்கு 214 சதவீதம் உயர்ந்தது. இதே காலத்தில் நிப்டி 20 சதவீதம் மட்டுமே உயர்ந்தது. கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 1,084 சதவீதம் ஆதாயம் அளித்துள்ளது. இந்நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.60,142 கோடியாக உள்ளது.