ரங்கா , ரங்கா கோஷத்துடன் ஸ்ரீரங்கத்தில் பிரதமர் மோடி சாமி தரிசனம்… !

பிரதமர் மோடியின் திருச்சி ஸ்ரீரங்கம் வருகையையொட்டி, திருச்சி ஸ்ரீரங்கம் பகுதிகளில் 4,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி மாவட்டம் முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பிரதமரின் வருகையையொட்டி, ஸ்ரீரங்கம் ஆலயத்திற்குள் இன்று பக்தர்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் வரும் ஜனவரி 22ம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைப்பெற உள்ளதையடுத்து பிரதமர் நரேந்திரமோடி 11 நாட்கள் கடும் விரதம் மேற்கொண்டு வருகிறார். தினமும் ஏதாவதொரு வைணவ கோயிலுக்கு சென்று சிறப்பு வழிபாடுகளை நடத்தி வருகிறார்.
அந்த வகையில் 108 வைணவ திருத்தலங்களில் முதல் திருத்தலமும், பூலோக வைகுண்டமாகவும் அழைக்கப்படும் திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலுக்கு இன்று சாமி தரிசனம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி திருச்சிக்கு வருகிறார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 10.20 மணிக்கு திருச்சி விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து இருந்து ஹெலிகாப்டர் மூலம் 10.45 மணி அளவில் புறப்பட்டு ஸ்ரீரங்கம் யாத்ரிநிவாஸ் எதிரே பஞ்சக்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்துக்கு செல்கிறார்.
பின்னர் அங்கிருந்து அவர் கார் மூலம் காலை 11.05 மணிக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலுக்கு செல்கிறார். அங்கு பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்படுகிறது. அதன்பிறகு ரெங்கநாதரை தரிசிக்கும் பிரதமர், கோயிலில் அனைத்து சன்னதிகளுக்கும் சென்று வழிபாடு நடத்துகிறார். பின்னர் ஆலயத்தின் மண்டபத்தில் தமிழறிஞர்கள் பாடும் கம்பராமாயணத்தைக் கேட்கிறார். அங்கு நடைபெறும் கம்பராமாயண பாராயண நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார். பின்னர் பகல் 12.50 மணிக்கு ஸ்ரீரங்கத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்டு பஞ்சக்கரை செல்கிறார்.