திருவையாறு தியாகராஜர் சுவாமிகள் ஆராதனை… ஜனவரி 30 உள்ளூர் விடுமுறை… கலெக்டர் உத்தரவு!

திருவையாறு தியாகராஜர் சுவாமிகள் ஆராதனை திருவிழாவை முன்னிட்டு, ஜனவரி 30ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

அன்றைய தினம், தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூரில் திருவையாறு தியாகராஜர் சுவாமிகள் ஆராதனை ஒவ்வொரு ஆண்டும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் நினைவாக கொண்டாடப்படும் 177வது ஆராதனை திருவிழா வரும் ஜனவரி 26ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த விழாவின் முக்கிய நிகழ்வான மங்கல இசை 30ம் தேதி காலை 8.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான கர்நாடக இசைக் கலைஞர்கள் பாடல்கள் பாடி தியாகராஜருக்கு இசையஞ்சலி செலுத்த உள்ளனர். இந்நிலையில் 177வது தியாகராஜர் ஆராதனை திருவிழாவை முன்னிட்டு 30ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடு செய்யும் வகையில் பிப்ரவரி 10ம் தேதி பணிநாளாக செயல்படும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் தியாகராஜ சுவாமிகளின் 177-வது ஆண்டு ஆராதனை விழா ஜனவரி 26ம் தேதி மாலை 5 மணிக்குத் தொடங்க உள்ளது. இந்த விழாவில் 26ம் தேதி மாலை 5 மணிக்கு தேசூர் செல்வரத்தினம் குழுவினரின் மங்கல இசையுடன் தொடங்கும். தொடக்கவிழாவுக்கு தியாகப் பிரம்ம மஹோத்ஸவ சபா தலைவர் ஜி.கே.வாசன் தலைமை வகிக்கிறார்.
அமைப்பின் செயலாளர் அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல் வரவேற்புரையும், துக்ளக்ஆசிரியர் குருமூர்த்தி குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கிவைத்துப் பேசுகின்றனர். இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் சிறப்புவிருந்தினராகவும், சபா செயலாளர் ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ் நன்றியுரையும் கூறுகின்றனர் அன்று இரவும் ஜனவரி 27, 28, 29ம் தேதிகளிலும் பல்வேறு கலைஞர்களின் பாட்டு, வீணை, நாகசுரம், தவில் உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *