Shubham Dubey: பான் ஸ்டால் உரிமையாளர் மகனுக்கு அடித்த ஜாக்பாட்.. ஐபிஎல் ஏலத்தில் 5.8 கோடி ரூபாய்
துபாயில் நடந்த ஐபிஎல் 2024 ஏலத்தின் போது ராஜஸ்தான் ராயல்ஸால் எடுக்கப்பட்ட விதர்பா பேட்ஸ்மேன் சுபம் துபேவுக்கு டிசம்பர் 19 மறக்க முடியாத தேதியாக இருக்கும்.
கேப் செய்யப்படாத பிளேயர்கள் பிரிவில் இடம்பெற்றிருந்த சுபம் துபேவுக்கு அடிப்படை விலை 20 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஏலத்தில் அவருடைய பெயர் வந்ததும் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இடையே கடுமையான போட்டி இருந்தது. இரு அணிகளும் அவரை வாங்க முயற்சி செய்ததால் அவருக்கான ஏல விலை கோடிகளில் எகிறியது.
சுபம் துபே நாக்பூரில் மிகவும் எளிமையான குடும்பத்தில் பிறந்தவர். அவர் இப்போது இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் மற்றும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் ஆகியோருடன் விளையாட இருக்கிறார். இது சுபம் துபே வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாக இருக்கும். இப்போது ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்டிருக்கும் சுபம் துபே, இந்தளவுக்கு வருவதற்கு தடைகளை எதிர்கொண்டிருக்கிறார். அவருடைய தந்தை பத்ரிபிரசாத் துபே பான் ஸ்டால் நடத்தி வருகிறார்.
குடும்பத்தில் கஷ்டம் இருந்தாலும் கிரிக்கெட்டில் தன்னுடைய ஆர்வத்தை குறைத்துக் கொள்ளமால் அதன் மீது கவனம் செலுத்தினார் துபே. அண்மையில் நடைபெற்று முடிந்த சையது முஷ்டாக் அலி தொடரில் அவருடைய திறமை கவனத்தை ஈர்த்தது. அந்த தொடரில் அவர் ஏழு போட்டிகளில் விளையாடி 187.28 ஸ்ட்ரைக் ரேட்டில் 222 ரன்கள் எடுத்தார்.
இந்த அதிரடி ஆட்டத்துக்காக தான் ராஜஸ்தான் அணி சுபம் துபேவை வாங்கியிருக்கிறது. இது குறித்து பேசிய 29 வயதான சுபம் துபே, ஐபிஎல் ஏலத்தில் இவ்வளவு பெரிய தொகை கிடைக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை என்றார். இந்த தொகை எங்கள் வாழ்நாளில் எதிர்பாராதது என்றும் உணர்ச்சிபூர்வமாக பேசினார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, ” சையத் முஷ்டாக் அலி டிராபியில் (SMAT) நான் சிறப்பாக செயல்பட்டேன். அதனால், ஏலத்தில் நான் எடுக்கப்படுவேன் என்ற நம்பிக்கை இருந்தது. வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால், இவ்வளவு பெரிய தொகையை நான் எதிர்பார்க்கவில்லை. கிளவுஸ் வாங்க கூட பணமில்லாதவன் நான். இந்த நேரத்தில் என்னை வழிநடத்திய வழிகாட்டியான மறைந்த சுதீப் ஜெய்ஸ்வால் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பணம் இல்லாத நேரத்தில் அவர் தான் எனக்கு உதவி செய்தார்.
அவருடைய ஆதரவு இல்லாமல் நான் என் வாழ்க்கையில் எதையும் சாதித்திருக்க முடியாது. பணமில்லாத நேரத்தில் அவர் எனக்கு ஒரு புதிய பேட் மற்றும் கிட் கொடுத்தார். அவர் என்னை அண்டர்-19, அண்டர்-23 மற்றும் ‘ஏ’ பிரிவு அணிகளுக்கான விளையாடும் லெவன் அணியில் சேர்த்தார். அவர் இல்லாமல் என்னால் விதர்பா அணியில் இடம்பிடித்திருக்க முடியாது” என தெரிவித்தார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி: சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர், ஷிம்ரோன் ஹெட்மியர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரல், ரியான் பராக், டோனோவன் ஃபெரைரா, குணால் ரத்தோர், ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் சென், நவ்தீப் ஷர்மா, பிரசந்திதி கிருஷ்ணா, ரதீப் ஷர்மா, யுஸ்வேந்திர சாஹல், ஆடம் ஜம்பா, அவேஷ் கான், ரோவ்மேன் பவல், ஷுபம் துபே, அபித் முஷ்டாக்.