செவ்வாய் தோஷத்தை தீர்க்கும் தை கார்த்திகை விரதம்!
இன்று முருகப்பெருமானுக்கு உகந்த தை கார்த்திகை விரத தினமாகும். இந்த விரதத்தினை பன்னிரண்டு ஆண்டுகள் தொடர்ந்து பின்பற்றி நாரதர் தேவ ரிஷி என்ற பெரும் பேற்றினைப் பெற்றார்.
திரிசங்கு, பகிரதன், அரிச்சந்திரன் ஆகியோர் பேரரசர்கள் ஆனார்கள். இத்தகைய சிறப்பு பெற்ற கிருத்திகை விரதத்தன்று வீட்டில் உள்ள முருகப்பெருமான் படத்திற்கு சந்தனம், குங்குமம் இட்டு மலர் சூட்டி கந்த சஷ்டி கவசம், கந்தபுராணம், கந்தர் கலிவெண்பா, சண்முகக் கவசம், திருப்புகழ் போன்றவற்றை மனமுருக பாராயணம் செய்யலாம்.
ஆறு விதமான பூக்களைக் கொண்டு முருகனுக்கு அர்ச்சனை செய்வது மிகவும் விசேஷம். பின்னர் தூப தீப ஆராதனைகள் காண்பித்து நம்மால் முடிந்த பதார்த்தங்களை நைவேத்தியம் செய்து சூடம் ஏற்றி வழிபட வேண்டும். அன்று உப்பில்லா உணவை எடுத்துக்கொண்டு கார்த்திகை விரதம் இருப்பது மிகவும் உயர்வாகக் கருதப்படுகிறது. கார்த்திகை நட்சத்திரம் மாதந்தோறும் வந்தாலும் தை, ஆடி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வரும் கிருத்திகை நட்சத்திரத்திற்கு அதிக சிறப்பு உண்டு.
தை மாதம் என்பது தேவர்கள் இறைவனை வழிபட்டு வேண்டிய வரங்கள் பெரும் காலமாக கருதப்படுகிறது. எனவே வேண்டிய வரங்களை பெற விரும்புபவர்கள் தை மாதத்தில் விரதம் இருந்து வழிபடலாம். தை மாதத்தில் வரும் நட்சத்திரங்களில் தைப்பூசம், தை கிருத்திகை இரண்டும் முருகனுக்குரிய நாளாகும்.
கிருத்திகை விரதம் என்பது மழலைச் செல்வம் பெறவும், செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைப்பட்டு இருப்பவர்கள், தீராத நோயால் அவதிப்படுபவர்கள், உயர் பதவி கிடைக்க விரும்புபவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விரதமாகும்.
ஆறு தாமரை மலர்களில் உதித்த முருகப்பெருமானை வளர்த்தவர்கள் கார்த்திகை பெண்கள் என்பதால் அவர்களை சிறப்பிக்கும் விதமாக சிவபெருமான் அளித்த வரத்தின் பேரில் கார்த்திகை முருகனுக்கு உரிய நட்சத்திரமாகவும் கார்த்திகேயன் என்பது முருகனுக்குரிய பெயராகவும் திகழ்கிறது.