விற்பனைக்கு வருகிறதா ஹீரோ ஸ்பிளெண்டர் எலெக்ட்ரிக் பைக்? ஒட்டுமொத்த இந்தியாவும் இதுக்காகதான் தவம் கெடக்குது!
சமூக வலை தளங்களில் வைரல் புகைப்படம் (Viral Pic) ஒன்று தற்போது மிக வேகமாக பரவி வருகிறது. டீம்-பிஹெச்பி தளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த புகைப்படத்தில், ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor) பைக் ஒன்று, உருமறைப்பு செய்யப்பட்ட நிலையில், சாலை சோதனையில் ஈடுபடுத்தப்பட்டதை நம்மால் பார்க்க முடிகிறது.
இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம் ஸ்பிளெண்டர் பைக்கின் எலெக்ட்ரிக் வெர்ஷனை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாகவும், அதன் சோதனை ஓட்டம்தான் தற்போது மிகவும் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல.
இது கோகோ ஏ1 (GoGo A1) நிறுவனத்தால் நடத்தப்பட்ட சோதனை ஓட்டம் என தெரிகிறது. கோகோ ஏ1 என்பது எலெக்ட்ரிக் கன்வெர்ஷன் கிட்-களை (Electric Conversion Kit) விற்பனை செய்து வரும் ஒரு நிறுவனம் ஆகும். நீங்கள் எலெக்ட்ரிக் வாகன உலகிற்குள் நுழைவதற்கு 2 வழிகள் இருக்கின்றன.
ஒன்று புதிதாக எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவது. மற்றொன்று எலெக்ட்ரிக் கன்வெர்ஷன் கிட்-களை பொருத்தி, தற்போது உள்ள ஐசி இன்ஜின் (IC Engine) வாகனங்களை, எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்றி கொள்வது. இதில், இரண்டாவது வழியை நீங்கள் தேர்வு செய்வதாக இருந்தால், கோகோ ஏ1 நிறுவனத்தின் தயாரிப்புகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
கோகோ ஏ1 நிறுவனமானது, ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹோண்டா (Honda) போன்ற நிறுவனங்களின் டூவீலர்களுக்கு ஏற்ற, எலெக்ட்ரிக் கன்வெர்ஷன் கிட்-களை விற்பனை செய்து கொண்டுள்ளது. இந்த வரிசையில் தற்போது புதிய எலெக்ட்ரிக் கன்வெர்ஷன் கிட் ஒன்றை உருவாக்கும் பணியில் கோகோ ஏ1 நிறுவனம் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதை ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கில் பொருத்தி, கோகோ ஏ1 நிறுவனம் சாலை சோதனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. அப்படி புனே (Pune) நகரில் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்ட போதுதான், தற்போது வைரலாக பரவி வரும் புகைப்படம் எடுக்கப்பட்டதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோகோ ஏ1 நிறுவனம் தற்போது விற்பனை செய்து வரும் எலெக்ட்ரிக் கன்வெர்ஷன் கிட்-களை விட, இந்த புதிய கிட், மேம்பட்டதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதன் விலை எவ்வளவு? எப்போது விற்பனைக்கு வரும்? என்பது போன்ற தகவல்களை எல்லாம் தெரிந்து கொள்வதற்கு நாம் இன்னும் சற்று பொறுமையாக காத்திருக்க வேண்டும்.
ஹீரோ ஸ்பிளெண்டர் இந்தியாவில் அதிகமாக விற்பனையாகி வரும் டூவீலர்களில் ஒன்றாகும். எனவே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமே ஸ்பிளெண்டர் பைக்கின் எலெக்ட்ரிக் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்தால், நன்றாக இருக்கும். இந்தியாவில் ஐசி இன்ஜின் வாகனங்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்கள் விற்பனைக்கு வருவது ஒன்றும் புதிய நிகழ்வெல்லாம் கிடையாது.
ஏற்கனவே பல்வேறு ஐசி இன்ஜின் கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முன்னாள் கூட்டாளியும், தற்போதைய போட்டியாளருமான ஹோண்டா நிறுவனம் கூட இந்திய சந்தையில் ஆக்டிவா (Honda Activa) ஸ்கூட்டரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது.
எனவே எதிர்காலத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமே ஸ்பிளெண்டர் பைக்கின் எலெக்ட்ரிக் வெர்ஷனை நேரடியாக விற்பனைக்கு கொண்டு வந்தால், நன்றாக இருக்கும் என நாங்கள் கருதுகிறோம். இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் தற்போதைக்கு இல்லை. எனினும் இது நடக்கவே நடக்காது என மறுத்து விட முடியாது. வாய்ப்புகள் உள்ளன.