சோகம்.. பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுவன்.. தான் படிக்கும் பள்ளி பேருந்திலேயே சிக்கி பரிதாப பலி..!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கணபதிபாளையம், பெத்தாம்பாளையம், ஏழுமலை நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமர். இவரது மகன் சாய்சரண் (வயது 6) பொங்கலூரில் உள்ள தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வந்தார். பொங்கல் விடுமுறை முடிந்து இன்று காலை வழக்கம் போல் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் வழக்கம் போல் பள்ளி முடிந்து தனியார் பள்ளி பேருந்தில் சிறுவன் சாய்சரண் வீடு திரும்பினான்.
அப்போது எதிர்பாராதவிதமாக அதே பேருந்தின் முன் சக்கரத்தில் சிறுவன் சிக்கியதாக கூறப்படுகிறது. இதை கவனிக்காத பஸ் டிரைவர் அங்கிருந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு சென்று சிறுவனை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுவனைப் பரிசோதித்தபோது வழியிலேயே சிறுவன் உயிரிழந்ததாக மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய மற்றும் நிறுத்தாமல் சென்ற டிரைவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.