விருப்பமில்லாமல் மும்பை பயணம்.. பாலிவுட்டின் கனவுக் கன்னியாக ஸ்ரீதேவி
1969 இல் சாண்டோ சின்னப்ப தேவர் தயாரிப்பில் எம்.ஏ.திருமுகம் இயக்கிய துணைவன் படத்திலும் ஸ்ரீதேவி முருகக் கடவுளாக சின்ன வேடத்தில் தோன்றினார். அவர் நாயகியாக நடித்த முதல் படம் மூன்று முடிச்சு. 1976 ல் அவரது 13 வது வயதில் வெளியானது. கமல், ரஜினி நடிக்க பாலசந்தர் இயக்கினார். அடுத்த வருடம் வெளியான 16 வயதினிலே மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. அதற்கடுத்த வருடம் கமலுடன் நடித்த சிகப்பு ரோஜாக்கள் வெளியானது. தொடர்ந்து இரண்டு சில்வர் ஜுப்லி படங்கள். 15 வயதில் இந்த புகழும், விளம்பர வெளிச்சமும் பெரிது.
16 வயதினிலே படத்தை தெலுங்கில் ராகவேந்திர ராவ் படஹரல்லா வயசு என்ற பெயரில் இயக்கியபோது ஸ்ரீதேவியையே நாயகியாக நடிக்க வைத்தார். கமல் நடித்த வேடத்தில் சந்திரமோகன் நடித்தார். படம் மாபெரும் வெற்றியை பெற்றது. தொடர்ந்து பாரதிராஜா 16 வயதினிலே படத்தை இந்தியில் ரீமேக் செய்தபோது ஸ்ரீதேவிக்கு அதில் நடிக்க துளியும் விருப்பமில்லை.