Thala Dhoni: அடுத்த சீசனிலும் தல தோனி விளையாடுவாரா! சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் என்ன சொன்னார் தெரியுமா?
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17வது சீசன் வரும் 2024 மார்ச் தொடங்கி மே மாதம் இறுதி வரை நடைபெறவுள்ளது. ஐபிஎல் 2024 தொடரை முன்னிட்டு ஒவ்வொரு அணிகளும் தங்களது அணியையும், அணியில் இடம்பிடித்திருக்கும் முக்கிய வீரர்களையும் தயார்படுத்தும் வேலைகளில் ஈடுபட தொடங்கியுள்ளன.
கடந்த 19ஆம் தேதி ஐபிஎல் 2024 தொடருக்கான மினி ஏலம் துபாயில் நடைபெற்று முடிந்தது. இதில் ஒவ்வொரு அணிகளும் தங்களது அணிகளுக்கு தேவைப்படும் ஆல்ரவுண்டர், பேட்ஸ்மேன், பவுலர்களை ஏலம் எடுத்தன.
அதன்படி ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களின் பேவரிட் அணியாக இருந்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் நியூசிலாந்து வீரர்களான ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோரை ஏலம் எடுத்தது. அதேபோல் இந்திய வீரர்களான ஷர்துல் தாக்கூர், சமீக் ரிஸ்வி, அவனிஷ் ராவ் ஆகியோரும் ஏலம் எடுக்கப்பட்டனர்.
ஏலத்துக்கு முன்னரே ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்த தகவலாக, தோனி ஐபிஎல் 2024 சீசன் விளையாடுவாரா, மாட்டாரா என்பதற்கான பதிலை சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் வெளிப்படுத்தினார்.
அதன்படி, ஐபிஎல் 2024 தொடரை தோனி விளையாட இருப்பது உறுதி என தெரிவித்த நிலையில், அணியிலும் அவரது பெயர் இடம்பிடித்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது.
இதையடுத்து இதுதான் தோனியின் கடைசி சீசனாக இருக்குமா என்ற அடுத்த கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்த நிலையில், அதுதொடர்பாக சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்ததாவது, ” இதுதான் தோனியின் கடைசி சீசனா என்பது பற்றி எனக்கு தெரியாது. அதைப் பற்றி அவரே நேரடியாக தெரிவிப்பார். அவர் என்ன செய்ய போகிறார் என்பது பற்றி தெரிவிக்கவில்லை.
மூட்டு வலி அறுவை சிகிச்சை செய்த பின்னர் தோனி தற்போது நலமுடன் இருக்கிறார். புத்துணர்வு முகாமில் பங்கேற்றுள்ளார். ஜிம்மில் பயிற்சி மேற்கொள்ள தொடங்கியுள்ளார். இன்னும் 10 நாள்களில் வலைப்பயிற்சியும் தொடங்குவார்” என்றார்.
ஐபிஎல் தொடரை பொறுத்தவரை சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் தலா 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2, ராஜஸ்தான் ராயல்ஸ். டெக்கான் சார்ஜர்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்ன்ஸ் ஆகிய அணிகள் தலா ஒரு சாம்பியன் ஆகியுள்ளன.
சிஎஸ்கே அணிக்கு 2022 சீசனின் முதல் பாதி தவிர மற்ற அனைத்து சீசன்களிலும் தோனியே கேப்டனாக செயல்பட்டுள்ளார். அவரது தலைமையில் தான் சிஎஸ்கே 5 முறை கோப்பை வென்றுள்ளனர்.
தற்போது 42 வயதாகும் தோனி, இந்த ஆண்டில் விளையாடியபோதே அடுத்த சீசனில் விளையாடுவாரா என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இதைத்தொடர்ந்து தோனி மற்றொரு சீசனும் விளையாடுவாரா என்கிற எதிர்பார்ப்பு ஐபிஎல் 2024 தொடர் தொடங்குவதற்கு முன்னரே ஏற்பட்டுள்ளது.