இதயத்தில் முதல் பகுதி மாற்று அறுவை சிகிச்சை… பச்சிளம் குழந்தைக்கு சாத்தியமானது எப்படி?!
பொதுவாகவே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முழு உறுப்புமே மாற்றப்படும். ஆனால், மருத்துவர்கள் இதயத்தின் ஒரு பகுதியை மட்டும் மாற்றியுள்ளனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த டெய்லர் மன்றோ, நிக் மன்றோ என்பவர்களுக்கு 2022-ல் ஓவன் மன்றோ என்ற குழந்தை பிறந்துள்ளது. இந்தக் குழந்தை பிறக்கும்போதே இதய வால்வுகள் மற்றும் தமனிகளில் குறைபாட்டுடன் பிறந்துள்ளது.
குழந்தை பிறந்து 17 நாள்களேயான நிலையில் அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள டியூக் ஹெல்த் ((Duke Health) அறுவை சிகிச்சை நிபுணர்கள், உறுப்பு தானம் செய்யப்பட்ட மற்றொரு குழந்தையின் இதயத்திலிருந்து தமனிகள் மற்றும் வால்வுகளை ஓவனின் இதயத்தில் சேர்த்து சிகிச்சையை மேற்கொண்டனர்.
அந்தச் சமயத்தில் குழந்தையின் இதயம் ஒரு ஸ்ட்ராபெர்ரி அளவிலேயே இருந்துள்ளது. தற்போது 20 மாதங்கள் ஆன நிலையில் குழந்தையின் இதயம் பேரிக்காய் பழ அளவில் உள்ளது.
சிகிச்சைக்குப் பின்னர் குழந்தையின் இதய திசுக்கள் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளன. புதிய வால்வுகள் மற்றும் ரத்த நாளங்கள் வளர்ச்சியடையத் தொடங்கி உள்ளன.
குழந்தையை சரிசெய்ய செயற்கை வால்வுகளை பொருத்தும் மற்றொரு முறையும் இருந்தது. ஆனால், இது குழந்தையின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அச்சுறுத்தலைத் தரக்கூடியது. எனவே, மருத்துவர்கள் பகுதி மாற்று இதய அறுவை சிகிச்சையைத் தேர்வு செய்தனர்.
ஓவனின் அம்மா டெய்லர் மன்றோ, குழந்தை பிறந்த சில மணிநேரத்துக்குள் இதய செயலிழப்பின் நான்காவது நிலைக்குச் சென்றதாகக் கூறியுள்ளார்.